அன்னுார்: அன்னுார் ஓதிமலை சாலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள பெரியம்மன் கோவில் வளாகத்தில், ‘சிறுதுளி’ சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி துவக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே, துவக்கி வைத்து பேசுகையில், ‘‘மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஓராண்டில் 12 ஒன்றியங்களிலும், தலா 5,000 வீதம் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்துடன், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் என, 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள், மரக்கன்றுகள் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும்,’’ என்றார். ‘சிறுதுளி’ நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், ‘‘சிறுதுளி சார்பில் இது, 200வது திட்டம். இத்துடன் சேர்த்து, சிறுதுளி சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நகரத்துக்குள் வனம் உருவாக்கி வருகிறோம். அறநிலையத்துறை, தங்கள் நிலத்தை எங்களுக்கு ஒதுக்கினால், அதில் பல்லாயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்போம். இங்கு ஜே.எஸ். ஆட்டோ காஸ்ட் பவுண்டரி சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள், புல் மெஷின் நிறுவனம் சார்பில், 7,500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, தனியார் நிறுவன துணை பொது மேலாளர் சரவண் சேனாபதி, நிர்வாக இயக்குனர் பார்த்திபன், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.