பதிவு செய்த நாள்
27
பிப்
2026
11:02
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலின் மாசி பிரம்மோற்சவ விழா முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி, கோவில் முன் இருந்த கொடிமரத்தில் கொடியேற்றினர். அன்றே காலையில் தொட்டி உற்சவ வீதியுலாவும், இரவு கிளி வாகன வீதியுலாவும் நடைபெற்றன.
இதனையடுத்து, 22ம் தேதி காலை தொட்டி உற்சவமும், இரவு பூத வாகன வீதி உலாவும், 23ம் தேதி புருஷாமிருக உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்ன வாகன வீதி உலாவும், 24ம் தேதி ஆட்டுக்கிடா வாகன உற்சவமும், இரவு வெள்ளி மயில் வாகன வீதியுலாவும் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை மங்களகிரி உற்சவமும், இரவு தங்கமயில் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது.நேற்று பகல் தொட்டி உற்சவமும், இரவு யானை வாகன வீதியுலாவும் நடைபெற்றன. விழாவின், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று 27ம் தேதி காலை 9:00 மணியளவில், தேரடியில் தொடங்கி நான்கு மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின்போது, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேர் வடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரவு மங்கள சாசன உற்சவம் நடைபெறுகிறது. இதனையடுத்து, நாளை தொட்டி உற்சவமும், மாலை ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறஉள்ளன.
மார்ச் 1 ம் தேதி விமான உற்சவமும், சிம்ம வாகனத்தில் ஆறுமுக சுவாமி அபிஷேகம் மற்றும் வீதியுலாவும், 2 ம் தேதி காலை தொட்டி உற்சவமும், பகல் 12:00 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரியும், இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் அன்று இரவு குதிரை வாகனத்தில் அவரோகனம், மவுன உற்சவமும், சண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகின்றன. மார்ச் 3 ம் தேதி மாலை கிரிவல உற்சவம், இரவு பந்தம்பரி உற்சவமும், 4ம் தேதி மாலை வேடர்பரி உற்சவமும் நடக்கிறது. மார்ச் 5 ம் தேதி காலை 7:30 மணிக்கு வள்ளியை முருகப்பெருமான் மணம் புரியும் திருக்கல்யாண உற்சவமும், தங்க மயில் வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்று பிரம்மோற்சவ விழா நிறைவுறுகிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். கோவில் அமைவிடம் சென்னை பாரிமுனையிலிருந்து 46 கி.மீ., தி.நகரிலிருந்து 42 கி.மீ., தாம்பரத்திலிருந்து 34 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 27 கி.மீ., மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை ஒட்டி கோவில் அமைந்துள்ளது. கோவில் நடை திறப்பு நேரம் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடைதிறக்கப்பட்டு சாத்தப்படும்.
தொடர்புக்கு: +91 44- 2744 6226, 90031 27288