உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயிலில் மட்டுமே சாற்றப்படும் தாழம்பூ
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2026 04:02
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் தாழம்பூ சாற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அருகே உள்ள அழகர் கோவில் மலைப்பகுதியில் இருந்து வரவழைக்கக் கூடிய தாழம்பூக்கள் உத்தரகோசமங்கையில் விற்பனை செய்வதால் பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
பூஜை பொருட்களுடன் தாழம்பூவையும் சாற்றி வழிபடுகின்றனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சிவபெருமான் தாழம்பூவின் பொய் சாட்சிக்கு மன்னிப்பு அளித்து அதனை ஏற்றுக் கொண்டதால் இங்கு தாழம்பூ சாற்றி வழிபடப்படுகிறது. பிரம்மன், திருமால் போட்டியின் போது தாழம்பூ பொய் சாட்சி கூறியதால் சிவ வழிபாட்டில் அதை தவிர்க்கப்படுகிறது. ஆனால் இந்த தலத்தில் இறைவனுக்கு நறுமணம் மிக்க தாழம்பூ உகந்ததாக கருதப்படுகிறது. பிரம்மன், திருமாலுக்கு இடையில் போட்டியில் சிவபெருமானின் முடிவை கண்டதாக தாழம்பூ பொய் சாட்சி கூறியதால் சிவ பூஜையில் விலக்கப்பட்டது. இருப்பினும், உத்தரகோசமங்கையில் மட்டும் தாழம்பூவை மங்களநாதர் ஏற்றுக்கொண்டார். இங்குள்ள இறைவன் மங்களநாதர் மங்களத்தை தருபவர். தாழம்பூவை ஏற்றுக் கொண்டு தாழம்பூவின் சாபத்தை நீக்கிய தளம் ஆகும். பொதுவாக சிவன் கோயில்களில் தாழம்பூ பயன்படுத்தப்படாத நிலையில் உத்தரகோசமங்கையில் தினமும் தாழம்பூ சாற்றி வழிபடுவது சிறப்பம்சமாகும்.
மெல்லிய நறுமணம் திகழும் தாழம்பூ அடுக்குகளாக பூ வியாபாரிகள் மூலம் ரூ. 200 மற்றும் 300 விற்பனை செய்யப்படுகிறது. அடர்த்தியாக தாழம்பூ விளையும் இடத்தில் தாழம்புவின் நறுமணத்தின் வாசம் ஈர்க்கப்பட்டு பாம்புகள், பூநாகம் உள்ளிட்டவைகள் குடியிருக்கும். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை திருநாளில் மட்டுமே தாழம்பூ வைக்கப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் சிவராத்திரி பூஜை காலங்களில் மூன்றாம் கால பூஜையில் தாழம்பூ அச்சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என சிவாச்சாரியார்கள் கூறினர்.