மாரியூர், சாயல்குடியில் மாசி மகம் வருண பூஜை, தீப ஆரத்தி; பக்தர்கள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 08:03
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. தீர்த்த கரைக்கு சென்று வருண பகவான் உள்ளிட்ட உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கடலுக்குள் புனித நீர் ஊற்றப்பட்டு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கடற்கரையில் பஞ்ச தீபங்கள் ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளினார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.
* சாயல்குடியில் உள்ள பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு தீப பெரும் விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு கைலாசநாதர் கோயில் வளாகத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது. பின்னர் ரிஷப வாகனத்தில் உற்ஸவமூர்த்திகள் தெப்பக்குளத்தை வலம் வந்து அலங்கார பந்தலில் அமர்ந்தனர்.
கோயில் தெப்பக்குளத்தில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், குடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூன்று பெரிய பஞ்சலோக அடுக்கு கொண்ட தீபாராதனையை குளத்திற்கு முன்பாக ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தெப்பக்குளத்தை சுற்றி பெண்கள் கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கைலாசநாதர் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.