மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் பால், பன்னீர்,தயிர்,இளநீர்,நெய்,திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெள்ளி உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை சுற்றி 3 முறை வலம் வந்தனர். அப்போது ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சுவாமிக்கு மலர்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்களால் அர்ச்சனை செய்தனர்.இதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.பிரதோஷ விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலிலும்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.