பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பெங்களூருவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் பூக்களால், பழநி மலைக்கோயில் உட்பிரகாரம் அலங்கரிக்கப்பட்டது. பழநியில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு, சேலம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த, திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், மலைக்கோயில் உட்பிரகாரம், பாரவேல் மண்டபத்தில், மஞ்சள், பிங்க், ரோஸ் போன்ற பலவண்ண ரோஜாபூக்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக பெங்களூருவிலிருந்து ஜருபுரா, அந்தோரியம், டச் ரோஜா பூக்கள், செவ்வந்திக்கள் கொண்டுவரப்பட்டன. ஏலக்காய் மாலை, மனோரஞ்சித மாலை செய்யப்பட்டு, மலைக்கோயில் உட்பிரகாரங்களில் வேல், ஓம் சரவணபவ என பூக்களால் வரையப்பட்டது. மண்டப தூண்களில் நிலைமாலைகள், பூங்கொத்துகள், பலவண்ணப் பூக்களால் ரங்கோலி அலங்காரமும் செய்யப்பட்டது.
பழநியில் திருக்கல்யாணம் தேரோட்டம்:
பழநி பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், நேற்று, நடந்தது.பங்குனி உத்திர விழா, மார்ச் 20 ல், திருஆவினன்குடி கோயிலில், கொடியேற்றத்துடன் துவங்கியது; பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருஆவினன்குடி எழுந்தருளி, பல வாகனங்களில் அருள்பாலித்தார். ஆறாம் நாளான நேற்று காலை, வள்ளி, தெய்வானையுடன், தந்தப்பலக்கில் சுவாமி வலம் வந்தார். சிறப்பு அலங்காரம், யாகபூஜைகள் செய்து, இரவு 8.20 மணிக்கு துலா லக்கனத்தில், திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு திருமணக்கோலத்தில் வெள்ளித்தேரில் சன்னதி, கிரி வீதிகளில் உலா வந்தார். இன்று மாலை 4.35 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.