பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
சேலம்: சேலம், ஃபேர்லாண்ட்ஸ் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியில் சத்ருசம்ஹார திருஷதி அர்ச்சனை செய்து வந்தால், நினைத்து காரியம் வெற்றி பெறும். சேலத்தில் கந்தாஸ்ரமம், குமரகிரி தண்டாயுதபாணி கோவில், செவ்வாய்பேட்டை முருகன் கோவில், ஃபேர்லாண்ட்ஸ் முருகன் கோவில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இதில் ஃபேர்லாண்ட்ஸ் ஞானசுப்பிரமணியன் கோவிலில் உள்ள மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். இங்கு முருகனை வழிபட்டால், நினைப்பது நிறைவேறும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இங்கு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதுதவிர, முருகனுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம், திருகார்த்திகை, சஷ்டி தினம் என்பன போன்ற விழாக்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். கோவிலை சுற்றி மரங்கள் உள்ளன. பக்தர்கள் முருகனை தரிசித்து விட்டு, வெளியே வர சிறப்பான வசதி உள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தருவது தெரியும். இந்த கோவிலில் சத்ருசம்ஹார திருஷதி அர்ச்சனை மிகவும் புகழ் பெற்றது. வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு, சத்ருசம்ஹார திருஷதி அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது. இந்த அர்ச்சனை செய்வதால் எப்பேர்ப்பட்ட எதிரியையும் வெல்லக்கூடிய வகையில் சக்தி கிடைக்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும். மாணவ, மாணவியர் படிப்புக்கு தடை வராது. 45 ஆண்டை கடந்து, இன்று, 46வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது ஃபேர்லாண்ட்ஸ் ஞானசுப்பிரமணியன் கோவில். நீங்களும் குடும்பத்துடன் ஒரு முறை சென்று முருகனை வழிபட்டால் நல்லது நடக்கும்.