பதிவு செய்த நாள்
02
மே
2013
11:05
நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த, 29ம் தேதி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, மகா மாரியம்மன் வாரவழிப்பாட்டு மன்றம் சார்பில், 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று இரவு, குதிரை வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே 2) மாலை, 6 மணிக்கு, பொங்கல் மாவிளக்கு பூஜை, அலகு குத்துதல், நாளை (மே 3) காலை, 8 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், மதியம், 2 மணிக்கு பாரம்பரிய நிகழ்ச்சியான காட்டேரி வேடமும், இரவு, 7 மணிக்கு வாண வேடிக்கை, மஞ்சள் நீராடுதல், மூஷிக வாகனத்தில் விநாயகர் ஸ்வாமி ஊர்வலம், கம்பம் பிடிங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 5ம் தேதி, அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா நாட்களில், புதன்சந்தை, பொம்மைக்குட்டைமேடு, கிழக்கு மற்றும் மேற்கு பாலப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், நடுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கும் சென்று, தாய் மாரியம்மனாக விளங்கும் இம்மாரியம்மன் அருள்பாலிக்கிறார்.