பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
திண்டுக்கல் மாரம்பாடி அடுத்த ஆண்டியகவுண்டனூரில் ஒக்கலிகர் காப்பு வல்லக்கவார் என்ற படவனவார் குலம் 4வது தம்மக்க பீரே கவுடர் கரை தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதவாணையம்மன், நந்தீஸ்வரர் கோயில்கள் உள்ளன. இக்குலத்தினரின் மாலைக்கோயில்களான, இங்கு பெரிய கும்பிடு விழா துவங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. நேற்று காலை பொதிக்கால் நடப்பட்டு, பூசாரி, பெத்தகாப்பு, கோடாங்கி, பொதிக்காவல் ஆகியோருக்கு கங்கணம் கட்டப்பட்டது. பூக்கூடை, மாக்கூடை, பழக்கூடை, ஆபரணப் பெட்டி அழைத்து வரப்பட்டு, ஸ்ரீ மதவாணையம்மன் அலங்கரிக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனை நடந்தது. இன்று காலை போணம் எடுத்தல், காலை 9 மணிக்கு பொதிக்கால் கம்பத்திற்கு பூஜை செய்தல், காலை 10 மணிக்கு முக்கியஸ்தர்களை கவுரவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு மேல் நீத்தார் நினைவு பொம்மைக்கல் நடுதல், குலத்தில் பிறந்த பெண்கள் சார்பால நிலுவைக்கூடையுடன் தேங்காய், குருணி நெல் காணிக்கை செலுத்துதல், குல பெண்களுக்கு அன்பளிப்பு வழங்குதல், வாரிசு இல்லாத பெண்களுக்கு சேலை வழங்குதல், தாயாதிகள் நிலுவைக்கூடை எடுத்தல், ஈத்துகாணிக்கை செலுத்துதல் போன்ற பாரம்பரிய வழிபாடுகள் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு லட்சுமணம்பட்டி பிச்சை சார்பாக, ஆன்மிக சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ., பழனிச்சாமி சார்பாக, முத்தாலம்மன் எனும் புராண நாடகமும் நடக்கிறது. நாளை (மே 29) காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், காலை 9 மணிக்கு தாயாதிகள் கும்பிடு வாங்குதலும், அடுத்ததாக குலத்தில் பிறந்த பெண்கள் கும்பிடு வாங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 11 மணிக்கு சலகருது (சுவாமி) மாடுகள் கொண்டு வந்திருக்கும் மந்தைக்கவுடர்களை உள்மந்தையினர் அழைத்து வருகின்றனர். சிறப்பு மதியம் 2 மணிக்கு சலகருது மாடுகளின் ஓட்டபந்தயம் நடக்கிறது. கும்பிடு விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர், தாயாதிகள் செய்து வருகின்றனர்.