பதிவு செய்த நாள்
01
ஆக
2014
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அம்மனுக்கு படைக்கப்பட்ட வடை, 18 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆடிப்பூர விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், முதுகில் அலகு குத்தி அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சியும், முதுகில் கொக்கி மாட்டி, அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, முள் படுக்கை மீது நடந்து சென்று, பக்தர்கள்
நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர் ஒருவர் மார்பில் உரலை வைத்து மஞ்சள் இடித்தல் போன்ற நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், மூதாட்டி ஒருவர், கொதிக்கும் எண்ணெய்யில், கையால் வடை சுட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மொத்தம், கையால், ஏழு வடை சுடப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின், ஏழு வடைகளும், பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அந்த ஏழு வடைகளும், 18 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு, குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். கடந்த ஆண்டு திருவிழாவில், வடை பெற்று சாப்பிட்டு, பிறந்த குழந்தைகளுக்கு, எடைக்கு எடை நாணயம் செலுத்தி, அவர்களது பெற்றோர் வழிபட்டனர்.