பதிவு செய்த நாள்
01
ஆக
2014
04:08
பழனி தெற்கு கிரி வீதியில், பழனி டவுன் விஸ்வபிராமண மகாஜன சங்கத்தினரின் ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் மூலஸ்தானத்தில் கோபுரம் இல்லை என்பது சிறப்பு அம்சமாகும்.இக்கோயிலில் ஆடிப் பெருவிழா, ஜூலை 22ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.மாலையில், சரவணப் பொய்கையில் சக்தி கரகம் அலங்கரித்து, காவல் தெய்வமாய் வீற்றிருக்கும் ஸ்ரீசந்தனக் கருப்பணசாமியை சந்நிதி வீதி வழியாக அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு பொங்கல் படைத்து, மா விளக்கு வைத்து, சந்தனக் காப்பு அலங்காரமும், அலங்கார அம்மன் கிரிவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு கலசம் ஆற்றில் சேர்க்கப்பட்ட பின், வெள்ளிக்கிழமை மறுபூஜை மற்றும் ஆடிப்பெருவிழா நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.