பதிவு செய்த நாள்
05
நவ
2014
12:11
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், 5 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி முடிந்ததும் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், சம்ப்ரோக்ஷணம் செய்ய, தேவஸ்தானம் முடிவு செய்தது.இதுகுறித்து, கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் கூறியதாவது:கோவில் புனரமைப்பு பணிக்காக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. கோவில் திருக்குளம் துார் வாரி, படிக்கட்டுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவில் உட்பகுதியில் ராமர் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி அருகில், தரையில் உள்ள பழைய கருங்கல்லை அகற்றி விட்டு, புதிதாக கல் பதிக்கப்பட உள்ளது.கோவில் நுழைவுவாயில் அருகில் உள்ள, ஆஞ்சநேயர் சன்னிதியில், வளைவு அமைக்கும் பணி நடக்கிறது. மேலும், கோவில் கோபுரத்தில் உள்ள சுதை சிற்பங்களுக்கு, வர்ணம் பூசப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும், ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும். அதன்பிறகு, அகோபில மடம் ஜீயரிடம் கலந்தாலோசனை செய்து, சம்ப்ரோக்ஷணம் நடைபெறும்இவ்வாறு, அவர் கூறினார்.