பதிவு செய்த நாள்
16
டிச
2014
03:12
சென்னிமலை : சென்னிமலை அருகே எழுந்தருளி உள்ள நஞ்சுண்டஈஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் உள்ள, புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், குளக்கரையில் எழுந்தருளி உள்ளது நஞ்சுண்டஈஸ்வரர் கோவில்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மற்றும் கார்த்திகை மாதம் வரும் திங்கள் கிழமைகளில் (சோமவாரம்) இக்கோவிலுக்கு, சென்னிமலை மட்டும்மல்லாது, சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், காங்கேயம், திருப்பூர், ஊத்துக்குளி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்வர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாளை தரிசனம் செய்வது போல், இப்பகுதியில் கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் வரும் திங்கள்கிழமை, நஞ்சுண்ட ஈஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.இங்கு எழுந்தருளி உள்ள ஈஸ்வர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.நேற்று, கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரம் என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. அதிகாலை, கண்ணன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, பக்தர்கள் கூட்டம் வர துவங்கிவிட்டது.
பகர்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.வேண்டுதல்காரர்கள் பொங்கல் வைத்து, உப்பு இல்லாமல், சாம்பார் தயார் செய்து சுவாமிக்கு படைத்து வேண்டினர். இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றால், தோல் நோய்கள் தாக்காது என்பது நம்பிக்கை.