உளுந்துார்பேட்டை: நத்தாமூர் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா நத்தாமூர் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. 27ம் தேதி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கூத்தாண்டவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமிக்கு மாலை அணிவித்து, வழிபட்டனர்.
பெண்ணைவலம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 15ம் தேதி சாகைவார்த்தலுடன் வைகாசி பெருவிழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, 20ம் தேதி காப்புக்கட்டுதல் நடந்தது. 26ம் தேதி கூத்தாண்டவர் உற்சவம் துவங்கியது. கடந்த 2ம் தேதி இரவு 9:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியும், நேற்று காலை 6:00 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து வயல்களின் வழியே மதியம் 12:30 மணிக்கு பந்தலடிக்கு இழுத்துச் சென்றனர்.மாலை 3:00 மணிக்கு அழுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இன்று (4ம் தேதி) மஞ்சள் நீராட்டுடன் வைகாசி பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா கண்ணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.