பதிவு செய்த நாள்
17
ஆக
2015
10:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும், தங்களது நேர்த்தி கடனை செலுத்தி, மூலவர் முருகப் பெருமானை தரிசித்தனர். திருத்தணி, முருகன் கோவிலில், நேற்று, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 10:20 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, 108 குடம் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, தங்கரதத்தில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காவடிகளுடன்....:ஆடிப்பூர விழாவை ஒட்டி, சென்னை வண்ணாரபேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று முன்தினம் இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினர். நேற்று காலை 8:00 மணி முதல், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆண், -பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணப்பொய்கையில் புனித நீராடினர். பின்னர், மலைப்படிகள் வழியாக சென்று, மூலவரை தரிசித்தனர். மேலும், சில பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபட்டனர்.
7 மணி நேரம்: ஆடிப்பூரம் மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், மலைக்கோவிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பொதுவழியில் மூலவரை தரிசிக்க, ஏழு மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிறப்பு தரிசனம், 150, 100 மற்றும் 50 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டரை மணிநேரம் காத்திருந்து, மூலவர் முருகப் பெருமானை தரிசித்தனர்.திருத்தணி டி.எஸ்.பி., பொற்செழியன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) சிவாஜி ஆகியோர் செய்திருந்தனர்.