பதிவு செய்த நாள்
16
நவ
2015
11:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ., 12 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவின் 4 ம் நாளான நேற்று தங்க ரதத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்கியது.அன்று முதல் பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். நாளை நவ.,17 ல் சூர சம்ஹாரம் நடக்கவுள்ளது. தங்க சப்பரம்: விழா நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். ஜெயந்திநாதர் காலை 8 மணிக்கு யாக சாலையில் எழுந்தருளுவார்.
அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கும்.பின் தங்கசப்பரத்தில் எழுந்தருள்வார். சண்முக விலாச மண்டபத்தை வந்து சேர்வார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடக்கும். பின் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து இரவு கோயில் வந்து சேர்வார். காலை யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1.30 மணிக்கு எழுந்தருளினார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு ஜெயந்திநாதர் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து இரவு கோயில் வந்து சேர்ந்தார்.
சூரசம்ஹாரம்: நாளை சூர சம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.00 மணிக்கு கடற்கரை மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். 4.30 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். நவ., 18 மாலை 5.30 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.