பதிவு செய்த நாள்
26
நவ
2015
12:11
குளித்தலை: குளித்தலை அடுத்த, சின்னரெட்டியபட்டி ஆவுடையலிங்கேஸ்வரர் கோவிலில், முதன் முதலாக நேற்று கிரிவலம் நடந்து, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, பொருந்தலூர் ஊராட்சி, சின்னரெட்டியபட்டியில், 300 அடி உயரத்தில், 2.60 கி.மீ சுற்றளவு கொண்ட பாறையாலான மலை உள்ளது. மலை உச்சியில் ஆவுடையநாயகி உடனான ஆவுடைய லிங்கேஸ்வரர் என்ற கோவில் உள்ளது. பாறை முதன் முதலாக தோன்றிய போதே மலை உச்சியில் தானாக லிங்கமும் தோன்றியதாக கூறப்படுகிறது. குருக்கள் இல்லாமல், இப்பகுதி பக்தர்களே தினமும் காலை, மாலையின் இடை பகுதியில் நந்தி பெருமானின் கால்தடம் பதித்த, வற்றாத சுனையில் தீர்த்தம் எடுத்து வந்து தமிழ் தேவார திருமுறையில் ஒருகால பூஜையாக நடத்தி வருகின்றனர். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பெருந்தலூர் ஊராட்சி நிர்வாகம், அறநிலைத்துறை மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் மலையை சுற்றி, 2.60 கி.மீ வரை புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் கிரிவலம் தொடங்கப்பட்டது. குளித்தலை கடம்பனேஸ்வரர், மாரியம்மன், அய்யர்மலை. ரத்தினகிரீஸ்வர். மேட்டு மருதூர் செல்லாண்டியம்மன், அங்காளம்மன் கோவில்கள் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.