பதிவு செய்த நாள்
25
டிச
2015
12:12
கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 29ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நேற்று கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது. இன்று அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீரை ஊர்வலமாக கொண்டு வந்து, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வர். அதன் பின், மாலை, 6 மணிக்கு நடக்கும் குத்து விளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்கின்றனர். ஜனவரி, 9ம் தேதி காலை, 7 மணிக்கு பசுபதி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு மஹா யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா இரவு, 7 மணிக்கு நடக்கிறது. முரளி சிவாச்சாரியார் தலைமையில், பூஜை செய்யப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டது. பூஜை முடிந்த பின் பங்கேற்றவர்களுக்கு லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரஹம் வழங்கப்பட்டது. ஹயக்ரீவர் ஹோமம் துவங்கியதும், விழா பந்தலில் விநாயகர், ஐயப்பன், லட்சுமி ஹயக்ரீவர் சிலைகள், 10 அடிக்கும் மேல் பிரமாண்டமாக வைக்கப்பட்டு அதன் முன் சிவாச்சாரியார்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டி மந்திரங்கள் ஓதினர். ஹோமத்தின் போது யானை, குதிரை, பசுமாடு கொண்டு வரப்பட்டு அவற்றுக்கும் பூஜை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.