பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
குன்னுார்: அருவங்காடு அருகேவுள்ள காரக்கொரை கிராமத்தில், ெஹத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. படுகர் இன மக்களின் ெஹத்தையம்மன் திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதில், ெஹத்தைகாரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் முடித்து, ஜெகதளா கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான, கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர். பின்னர், சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். இதன் ஒரு பகுதியாக, நேற்று காரக்கொரையில் பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் பூசாரி குண்டம் இறங்கிய பின்னர், கும்பம் எடுத்தவரும், விரதம் இருந்த ெஹத்தைக்காரர்கள்,13 பேரும் குண்டம் இறங்கினர். விழாவில்,15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 28ல் ஜெகதளாவில் ெஹத்தையம்மன் பண்டிகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆறு ஊர் தலைவர் கிருஷ்ணன், எட்டு ஹட்டி தலைவர்கள், கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். கமிட்டியினர் கூறுகையில்,“1958ம் ஆண்டில் இருந்து ெஹத்தையம்மன் திருவிழா தினத்தில், கார்டைட் தொழிற்சாலைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றனர்.