பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்ப சுவாமிக்கு மஹா அபிசேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 29ம் ஆண்டு விழா முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நட்சத்திர யாகம், ராஜ மாதங்கி யாகம், ஏகதின லட்சார்ச்சனை விழா, சீதா கல்யாணம், ஹனுமந்த ஜெயந்தி உற்சவம் கோலாகலமாக நடக்கிறது. கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், அமராவதி ஆற்றங்கரையில் இருந்து நெய், சந்தனம், தேன், பன்னீர், தீர்த்தம் உள்ளிட்டவற்றை குடத்தில் சுமந்து கொண்டு, 108 பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு அபிசேகம் நேற்று காலை, 8 மணிக்கு நடந்தது. அதன்பின், காலை, 9 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை துவங்கியது. மதியம், 12 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 1 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியானது. இதைத் தொடர்ந்து தசாம்ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி நடந்து லட்சார்ச்சனையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணியளவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று குத்து விளக்கு பூஜையில் பங்கேற்று தங்கள் குறைகளை தீர வேண்டிக் கொண்டனர். அதன் பின் நேற்றிரவு, 8 மணிக்கு வீரமணி தாசனின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கரூர் பசுபதீஸ்வரா ஐயப்ப சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.