பதிவு செய்த நாள்
04
ஜன
2016
12:01
பழநி: சுகாதரமற்ற முறையில் பழநிகோயில் உள்ளதால், வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பழநி தைப்பூசவிழா வரும் ஜன.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,27வரை நடக்கிறது. தற்போது ஏராளமான வெளி மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை பக்தர்களும் குவிகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நகராட்சி, கோயில் நிர்வாகம், ஊராட்சிகள் அலட்சியமாக உள்ளன. போதிய கழிப்பறை வசதி இல்லாமலும், குடிநீர் வினியோகம், குப்பை குவிந்து, கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலைகாணப்படுகிறது.பஸ் ஸ்டாண்ட் அடிவார ரோடு, சன்னதிவீதி, சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடங்களில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் ஒரு பாட்டில் ரூ.5க்கு விலைக்கு வாங்குகின்றனர். ஆண்டிற்கு ரூ.பலகோடி வருமானம் உள்ள பழநிகோயில் நிர்வாகம், அனைத்து துறைகளையும் இணைத்து அடிப்படை வசதிகளை செய்து தர முன் வரவேண்டும்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ கிரிவீதிகள், இலவச சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் மற்றும் பக்தர்கள் சமையல் செய்ய பயன்படுத்துவதால் குடிநீர் தட்டுபாடு ஏற்படுகிறது. காலியாகும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்,”என்றார்.