பதிவு செய்த நாள்
04
ஜன
2016
12:01
வேலூர்: வேலூர் அடுத்த, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம் சக்தி அம்மாவின், 40வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், நாராயணி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பூர்ணாஹூதி, மங்கள நாராயணி பூஜை நடந்தது. மதியம், 12 மணிக்கு சக்தி அம்மாவின், 40வது ஜெயந்தி விழா நடந்தது. நாராயணி பீடம் மேலாளர் சம்பத் தலைமை வகித்தார். உலக சமாதானத்திற்காக, 40 புறாக்களை சக்தி அம்மா பறக்க விட்டார். சக்தி அம்மாவுக்கு, கோவை கே.ஜி., மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பக்தவச்சலம் அவரது குடும்பத்தினர் பாத பூஜை செய்தனர். சக்தி அம்மாவின் அருளுரைகள் அடங்கிய நூலை, பீஹார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த்ஜி வெளியிட, மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் விஜய் சாம்ப்ளாஜி பெற்றுக் கொண்டார். விழாவில் சக்தி அம்மா பேசுகையில், ஒரு மனிதனின் வாழ்க்கை, படிப்பால், செல்வத்தால், பலத்தால் முழுமையடைவதில்லை. இத்துடன் ஞானம் என்ற ஆன்மிகம் சேரும் போது தான் முழுமையடையும், என்றார். கோவை காமாட்சிபுரி ஆதீனம், கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள், கோவை நீலமலை சித்தர், பா.ஜ., மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன். தேசிய தலைவர் எல்.கணேசன், நாராயணி அறங்காவலர் சவுந்தரராஜன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.