பதிவு செய்த நாள்
04
ஜன
2016
12:01
ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்: ராமபிரானால் உருவாக்கப்பட்டது ராமேஸ்வரம். அந்த தலத்தில் நம் கால் பதிந்ததும், நம் உள்ளத்தில் என்ன பதிய வேண்டும் தெரியுமா... இனி சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வு தான். திருமால், ராமனாக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். தசரதரை தந்தையாகவும், கோசலையை தாயாகவும், சீதையை மனைவியாகவும் ஏற்றார். ராமன் என்றாலே ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் என்பார்கள். அவரிடம் வில் இருந்ததும், ஒரே பெண்மணியான சீதையிடம் மட்டும் மனம் லயித்திருந்ததும் நமக்கு தெரியும். அதென்ன... ஒரு சொல் என்றால் அதற்கு விளக்கம், தன் தந்தை சொல்லைக் காப்பாற்றினார் என்பார்கள். அது மட்டுமல்ல...அவரும் தன் சத்திய வார்த்தையை காப்பாற்றியிருக்கிறார்.
தசரதர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதற்கு தேவர்கள், முனிவர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். தேவர்கள் தசரதரிடம், அசுரர்களால் தாங்கள் படும் தொல்லை பற்றி எடுத்துக் கூறினர்.அப்போது ராமன் சொன்னார். “கவலையை விடுங்கள். நான் பதினோராயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் தான் இருப்பேன். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்,” என்றார். இத்தனை ஆண்டுகள் பூமியில் இருப்பேன் என்று சொன்னதை அவர் மறக்கவே இல்லை. தேவர்களிடம் சொன்னபடி அசுரர்களை அவர் அழித்து விட்டார். குறிப்பிட்ட காலமும் முடிந்து விட்டது. பதினோராயிரம் ஆண்டின் கடைசி நாள், எமன் வந்து அரண்மனை வாசலில் நின்றான். வாயில் காப்பவனிடம் சொல்லி அனுப்பினான். உடனே எமனை உள்ளே அனுப்ப உத்தரவிட்டார் ராமன். அவரது காதில், “இன்றோடு முடிந்தது. கிளம்பலாமா?” என்றான். இந்த கேள்வியைக் கேட்ட பிறகு அவன் மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது.
வருவாரா... மாட்டாரா...மாட்டேன்...இன்னும் ஒரு நாள் போகட்டும் என்று சொல்லி விட்டால்... இவர் ஸ்ரீமன் நாராயணன் ஆயிற்றே...நம்மால் என்ன செய்ய முடியும்? என தவித்துக் கொண்டிருக்கும் போதே, கிளம்பலாமா...? என்று புறப்பட்டு விட்டார் ராமன். 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யாகசாலையில் சொன்ன அந்த சொல்லை ராமன் மீறவில்லை. சத்திய புருஷனான அவர் எமனுடன் கிளம்பி விட்டார். உத்தர ராமாயணத்தில் இந்த தகவல் இருக்கிறது. அந்த சத்திய புருஷன் வழிபட்ட ராமேஸ்வரம் எவ்வளவு புனிதமானது...! அங்கே கும்பாபிஷேகத்தை காணும் பாக்கியம் இந்தப்பிறப்பில் நமக்கு கிடைத்திருக்கிறதென்றால் அதைத் தவற விடலாமா!