திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருவிழா நடந்தது. திருநெல்வேலிக்கு பெயர் வரக்காரணமான திருவிளையாடல் நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது. நெல்லையப்பரை தினமும் பூஜை செய்து வழிபடும் வேதபட்டர் என்பவர், சுவாமிக்குஅமுதுபடைப்பதற்காக பொதுமக்களிடம் யாசகம் பெற்ற நெல்மணிகளை கோயில்முன்பாக காயப்போட்டுவிட்டு தாமிரபரணியில் குளிக்கச் சென்றிருந்தார். கோயிலுக்கு திரும்ப வரும்போது பலத்த மழை கொட்டியது.சுவாமிக்கு உணவு சமைக்க காயவைத்திருந்த நெல் மழையில் நனைந்திருக்குமே என அச்சத்துடன் வந்த வேதபட்டருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
வேலி போட்டாற்போல, நெல் மணிகள் காயப்போட்டிருந்த பகுதியில் சொட்டு மழைநீர் கூட இல்லை. சுற்றிலும் மழை பெய்திருந்தது. நெல்லை வேலியிட்டு காத்தக்கடவுளின் ஊர் என்பதால் திருநெல்வேலி என பெயர் வந்தது. இந்த விழாவை ஆண்டுதோறும் தைப்பூச விழாவின் போது கொண்டாடுகிறார்கள். நேற்று நெல்லையப்பர் கோயிலில் கோயில் சிவாச்சாரியார்கள் அந்த திருவிளையாடலை நடத்திக் காண்பித்தனர். இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.சாலி வாடிதிருநெல்வேலி என்ற பெயருக்கு முன் இந்த ஊர் சாலி வாடி என்று அழைக்கப்பட்டது. சாலி என்றால் நெல், வாடி என்றால் கிராமம் அல்லது ஊர். மேலும் மூங்கில் அதிகமாக வளர்ந்துள்ளதால் மூங்கில் வனம் என்றும் அழைக்கப்பட்டது. விழாவைத் தொடர்ந்து சுவாமி சன்னதி கொடிமர மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும், பஞ்ச மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகமும் நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடைபெற்றது. இக்கோயிலில் வரும் 24ம் தேதி தைப்பூசம் தீர்த்தவாரி விழா கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெறுகிறது. 25ம் தேதி அன்று கோயில் சவுந்திர சபா மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர் மூர்த்தியின் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 26ம் தேதி வெளித்தெப்பத்தில் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.