பதிவு செய்த நாள்
19
ஜன
2016
11:01
ஸ்ரீவில்லிபுத்துார்: இந்தியாவிலே மிக பெரிய தங்க கோபுரம் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் விமானக்கோபுரத்திற்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 108 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களில் ஒன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில். திருப்பதி ஏழுமலையான் கோயில் விமான கோபுரத்தை விட உயர்ந்த கோபுரம் இக்கோயிலின் விமானகோபுரம். 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் விமானகோபுரத்திற்கு நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலம் தொழில் அதிபர்கள் ,பக்தர்களிடம் ரூ. 25 கோடி மதிப்பில் 76 கிலோ தங்கம் நன்கொடையாக பெறப்பட்டு முழுக்க தங்கத்தால் அமைக்கபட்டுள்ளது.இது இந்தியாவிலே மிக பெரிய தங்க கோபுரம். இக்கோயிலின் தங்கவிமானகோபுரம், ராஜகோபுரம்,பரிவாரங்கள் மற்றும் கருடாழ்வார் விமான கோபுரங்களுக்கு நாளை காலை 10.05 மணிக்குமேல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 4 மணிக்குமேல் விஸ்வரூபம்,யாத்ரதானம், கடம் புறப்பாடு நடக்கிறது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இரவு 9மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கருடசேவை நடக்கிறது.பாதுகாப்பில் 1300 போலீசார்கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்க்க, நான்கு ரத வீதியில் டிவி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் எஸ்.பி., அரவிந்தன் தலைமையில் 8 டி.எஸ்.பி.,க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தங்க விமான கோபுரத்தை சுற்றி கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.உள்ளூர் விடுமுறைநாளை காலை 7 மணிமுதல் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, தேனி என வடக்கு பகுதியிலிருந்து வரும் பஸ்கள் சர்ச் பகுதியிலிருந்து திரும்பி சிவகாசி ரோடு, என்.ஜி.ஓ. காலனி, நகராட்சி அலுவலகம் வழியாகவும், ராஜபாளையத்திலிருந்து வரும் பஸ்கள் மம்சாபுரம்,கம்மாபட்டி, ஆத்துகடை, ராமகிருஷ்ணாபுரம் வழியாக செல்லும். ஸ்ரீவில்லிபுத்துார் வரும் டவுன்பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்ட் வரும் வகையில் போக்குவரத்து மாற்றியமைக்கபட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை யொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.