பதிவு செய்த நாள்
19
ஜன
2016
11:01
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று நடைபெற்றது. காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், தைப்பூசத் தேர்த்திருவிழா, 15ல், வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00க்கு, வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, மயில் வாகன அபிஷேகம் நடைபெற்றது. பகல், 11:00க்கு, விநாயகர் வழிபாடு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் கொடிமரத்தில், தேர்த்திருவிழா சேவற்கொடி ஏற்றப்பட்டு, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு, சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார். தினமும், காலை, 9:00க்கு, காலசந்தி பூஜை, மண்டப கட்டளை பூஜை நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம், 24ல் நடக்கிறது; அன்று அதிகாலை, 4:00க்கு மகா அபிஷேகம்; 6:00க்கு, சுவாமி ரதத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00க்கு, தேரோட்டம் துவக்கி வைக்கப்படும். மூன்று நாள் மலையை வலம் வரும் திருத்தேர், 26ல், நிலையை வந்தடையும்.