பதிவு செய்த நாள்
19
ஜன
2016
11:01
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராடிபாளையம் கிராமத்தில், பல தலைமுறைகளாக பூப்பொங்கல் அன்று அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் வீட்டிற்கும், சலங்கை மாடு வந்து செல்வதை ஒட்டி, மஞ்சள் நீராட்டு விழா வெகுவிமரிசையாக நடந்தது. கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவராடிபாளையம் கிராமத்தில் மட்டும், பல தலைமுறைகளாக தை பொங்கல் திருநாளில் வரும் மூன்று நாட்களில், பசு மாடு கன்று ஈன்றால், அந்த மாட்டை அடுத்து ஆண்டு வரும் பொங்கலன்று, கன்று ஈன்ற வீட்டுக்காரரின் தாய்மாமன் வீட்டிற்கு அழைத்துச்செல்வர். அங்கு, தாய்மாமன் வீட்டை சேர்ந்தவர்களுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து, விருந்து வைக்கப்படுகிறது. பின், மாட்டின் இரண்டு காதுகளில், கத்தியால் கிறல் போடப்படுவதால், அந்த மாடு சாமிக்கு அர்பணிக்கப்படுகிறது. மாட்டின் கழுத்தில் மஞ்சள் துணியை கட்டியும், சலங்கையும் அணிவிக்கப்பட்டு, மஞ்சள் நீர் மாட்டிற்கு ஊற்றப்படுகிறது. இவ்வாறு பொங்கல் திருநாளில் பிறந்த மாடுகளை, பூப்பொங்கல் அன்று காலை, 6:00 மணிக்கு மைதானத்தில் வரிசையாக நிறுத்தப்படுகிறது.
பின், வீதிக்கு ஒன்றாக பிரித்து அழைத்து செல்லப்படுகிறது. மாட்டின் வருகைக்காக காத்திருக்கும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், வீட்டின் முன் மஞ்சள் நீருடன் நின்று, மாட்டினை வரவேற்பர். வீட்டிற்குள் அழைத்து சென்று, அதன் மேல் மஞ்சள் நீரை ஊற்றி வழிபடுகின்றனர். அதன்படி பூப்பொங்கலன்று காலை, 10:00 மணியளவில் நான்கு சலங்கை மாடுகளை அழைத்து வந்தனர். அரண்மனை கவுண்டர் நடராஜ் வீட்டில் முதல் வழிபாடும், அதனை தொடர்ந்து ஊர்க்கவுண்டர் காளிமுத்துசாமி வீட்டில் மாடுகளுக்கு பூஜை செய்யப் பட்டது. தொடர்ந்து, சலங்கை மாடுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றது. அங்கு காத்திருந்த மக்கள் சலங்கை மாட்டின் மேல் மஞ்ள் நீர் ஊற்றி, தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர். பின், மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். பின், 2:00 மணியளவில், மீண்டும் சலங்கை மாடுகளை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோதவாடி மாலை கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு செய்தனர். மாலை 5.00 மணியளவில் கிராமத்திற்கு திரும்பி வந்தனர். பின், மாட்டுக்கு சொந்தகாரர் மாட்டை வீட்டிற்கு அழைத்துச்சென்றதும், பொதுமக்கள் சார்பில், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம் போன்ற விளையாட்டுகளும் நடந்தன. இதனால், கிராமமே திருவிழா கோலம் பூண்டு காணப்பட்டது. சலங்கை மாடு இறக்கும் காலம் வரை மாட்டுக்கு சொந்தகாரரே வைத்து பராமரித்து வருகிறார். இடையில், மாட்டை விற்பனை செய்தால், அதற்காக கிடைக்கும் தொகையினை கோதவாடி மாலை கோவிலுக்கு வழங்கப்படுவது இக்கிராமத்தின் தனி சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.