பதிவு செய்த நாள்
13
பிப்
2016
02:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மாசி பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. இது
வரும், 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதில், மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டிற்கான மாசி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. இது வரும், 23ம் தேதி வரை நடக்கிறது. விழாவை ஒட்டி நேற்று இரவு, விநாயகர் வீதியுலாவும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், இரவு கேடய உலா உற்சவம் நடக்கின்றன.
வரும், 20ம் தேதி, உற்சவர் முருகப் பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாணம்; 22ம் தேதி, உற்சவர் சண்முகப் பெருமானுக்கு தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கமும்; 23ம் தேதி, சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில், தினமும் காலை, இரவு நேரங்களில், ஒவ்வொரு வாகனத்திலும் உற்சவர் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.