திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா ஆமை வேகத்தில் அடிப்படை வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2016 11:02
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உற்சவத்திற்கான அடிப்படை வசதிகளுக்கான பணிகள் வேகம் பெறாத நிலை உள்ளதால் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் மாசித்தெப்ப உற்சவத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு மகாமக ஆண்டு என்பதால் வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆலோசனைக் கூட்டம்,அதிகாரிகள் வருகைக்கேற்ப அடிப்படை வசதிகள் ஏதும் திருக்கோஷ்டி யூரில் நடைபெறவில்லை. கோயில் முன்பாகவே முற்றுப்பெறாத ஹைமாஸ் விளக்கு, பராமரிக்கப்படாத தேரோடும் சாலை, குப்பையுடன் காணப்படும் திருப்பாற்கடல், பாதுகாப்பில்லாத சுற்றுவேலியுடன் காணப்படுகிறது. குடிநீர் குழாய்,பெண்களுக்கான கழிப்பறை,எரியாத தெருவிளக்கு பராமரிப்பு என எதுவும் நடைபெறவில்லை. கோயிலுக்கு தேசியநெடுஞ்சாலையிலிருந்து கோயிலுக்கு பிரியும் ரோட்டிற்கான பணி கூட நிறைவு பெறவில்லை. கடந்த சில நாட்களாக தீபம் ஏற்ற வரும் பெண்கள் கழிவு நிறைந்த படித்துறையில் வழிபடும் அவலம் மாறவில்லை. கார் பார்க்கிற்கு செப்பனிடப்படாத வயல், தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கான முன்னேற்பாடு இல்லாதது,முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம் அமைத்தல் போன்ற பணி துவக்கப்படாத நிலையே காணப்படுகிறது.பிப்.,22ல் தெப்பம் என்பதால்,நாளை முதல் பக்தர்கள் வருகை துவங்க உள்ள நிலையில்,அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப்படாதது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.