பதிவு செய்த நாள்
24
பிப்
2016
11:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா இன்று நடைபெறுகிறது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இக்கோவிலில் உள்ள நீதிக்கல் மகிமை என்னவென்றால், பில்லி, சூனியம், மந்திரம், ஏவல், நம்பிக்கை துரோகம், மோசடி போன்ற பெரும் பகையால் பாதிக்கப்பட்டவர்களும், பொருள் திருட்டுப்போனவர்களும் மிளகாய் அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்கின்றனர். முறையீடு நியாயமானதாக இருந்தால், தவறு செய்தோர் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகின்றனர். இந்த மிளகாய் அரைத்து, நீதி வேண்டிய பின், 90வது நாளில், அம்மனுக்கு எண்ணெய் காப்பு நடத்திட வேண்டும் என்பது ஐதீகம். இந்த வழிபாடு, பெண்களின் தீராத வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க உதிர மாலை வாங்கி சாற்றும் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு முறைகளில், பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன், குண்டம் திருவிழா துவங்கியது. விழாவையொட்டி, கோவிலில், காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.கடந்த 21ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல், மயான பூஜையும்; நேற்றுமுன்தினம் காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திர தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குண்டம் திருவிழாவையொட்டி, போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர். நாளை காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை, 10:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகா முனி பூஜை நிகழ்ச்சியும்; 26ம் தேதி, காலை, 11:30 மணிக்கு மகா அபிேஷகம், நடக்கிறது.