திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை குளத்தில் அப்பர் தெப்பஉற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சைவ சமயத்தை கடைப்பிடித்த திருநாவுக்கரசர் என்ற அப்பரை சமணர்கள், கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்போது அப்பர் சிவபெருமானை வேண்ட, கல் தெப்பமாக மாறி மிதந்ததாக புராணங்களில் உள்ளது. இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மாசிமக உற்சவத்தின்போது நெல்லையப்பர் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமாக நடத்தப்படுகிறது. இந்த உற்சவத்துக்கு முன்னதாக அப்பருக்கு பாயசத்தில் விஷம் கலந்து கொடுக்கும் நிகழ்ச்சி, யானையை விட்டு மிதிக்கும் திருவிளையாடல், அப்பரை கட்டி இறக்கப்பட்ட கல் தெப்பமாக மாறிய புராண வைபவம் போன்றவை நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து அப்பர் ஏழு முறை தெப்பத்தில் வலம் வந் தார். அப்போது சிவன் கைலாச பர்வத வாகனத்திலும் பார்வதி தங்கக்கிளி வாகனத்திலும் அப்பருக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தினமலர் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.