பதிவு செய்த நாள்
25
பிப்
2016
12:02
திருவண்ணாமலை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் உள்ள சித்ர குப்தன் சன்னதியில், 5,068 நெய் தீபமேற்றி, அ.தி.மு.க.,வினர் வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, பால் குட ஊர்வலம், அன்னதானம், கொடியேற்றி நல திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் தலைமையில், நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு ஹெல்மெட் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற, 1,068 பேருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில், சித்ரகுப்தன் சன்னதி முன்பு, 5,068 நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். நேற்று காலை அண்ணாமலையார் கோவில் எதிரில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு பல்துறை பணிவிளக்க பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் ஞானசேகரன் இதை துவக்கி வைத்தார்.