பதிவு செய்த நாள்
25
பிப்
2016
12:02
அன்னதானப்பட்டி: சேலம் அருகே, காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நெத்திமேடு தண்ணீர்பந்தல் மகாகாளியம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த, 16ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 6 மணிக்கு, சக்தி அழைப்பு முடிந்ததும், 8 மணி முதல், ஏராளமானோர் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் அம்மனை வழிபட்டனர். இரவு, 7 மணியளவில், பக்தர்கள் பூங்கரகம், அக்கினிகரகம் எடுத்து அலகுகுத்தி வந்தனர். அதையடுத்து, காளியம்மன் மலர் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (பிப்., 25) இரவு, 10 மணிக்கு சத்தாபரணம் நடைபெறும். நாளை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.