பதிவு செய்த நாள்
09
பிப்
2017
12:02
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்த தை தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தை திருவிழா, ஜன., 31ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நம்பெருமாள், தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உத்தர வீதிகளில் வலம் வந்தார். தை தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு மேல், ரங்கா ரங்கா கோபுரம் அருகே உள்ள தை தேர் மண்டபத்தில், நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட தேரில், நம்பெருமாள், ஸ்ரீதேவி,- பூதேவியுடன் எழுந்தருளினார். காலை, 6:00 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கியது. இணை ஆணையர் ஜெயராமன் உட்பட ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வெக்காளியம்மன் ரத உற்சவம்: திருச்சி வெக்காளியம்மன் கோவில் தைப்பூச திருவிழா, 1ம் தேதி துவங்கியது. அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று காலை, 10:00 மணிக்கு வெக்காளியம்மன், ரதத்தில் எழுந்தருளி, வீதி வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ரதம் இழுத்து, அம்மனை வழிபட்டனர்.