திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா:குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2017 01:02
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில் இன்று (பிப்.9) தைப்பூச திருவிழா நடக்கிறது. இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து விரதமிருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகன் வேடமணிந்து பக்தர்கள், ஆடல் பாடலுடன் பாதயாத்திரையாக திருச்செந்துார் வருகை தருகின்றனர். பக்தர்கள் குவிந்து வருவதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இன்று திருச்செந்துார் முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிேஷகம் நடக்கிறது. பின் காலை 7 .30 மணிக்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. உச்சிக்கால தீபாரதனை நடக்கிறது. அலை வாய் உகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு மாலை 6 மணிக்கு உபயதாரர்கள் சார்பில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடக்கிறது. பின் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, கோயில் வந்து சேர்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.