பதிவு செய்த நாள்
09
பிப்
2017
02:02
கோவை : கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இதையடுத்து, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, அவிநாசி ரோடு, பழைய மேம்பாலம் மற்றும் புரூக் பாண்ட் ரோட்டிலிருந்து வரும், கனரக வாகனங்கள் பெரியகடை வீதி வழியாக உக்கடம், பாலக்காடு ரோடு செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக, திருச்சி ரோடு கிளாசிக் டவர், வாலாங்குளம் பை பாஸ் வழியாக உக்கடம் சென்று, வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
திருச்சி ரோட்டிலிருந்து பெரியகடைவீதி, மணிகூண்டு, டவுன்ஹால் வழியாக செல்லும், அனைத்து வாகனங்களும் கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக, உக்கடம் செல்ல வேண்டும். மரக்கடை வழியாக என்.எச்., ரோட்டிலிருந்து டவுன்ஹால் வழியாக, உக்கடம் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் ஐந்து முக்கு வழியாக, ராஜவீதியை அடைந்து, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். கனரக வாகனங்கள் லங்கா கார்னர், திருச்சி ரோடு கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் சென்று, வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சுங்கம் பை பாஸ் ரோட்டிலிருந்து, லிங்க் ரோடு வழியாகவும், உக்கடம் பைபாஸ் ரோட்டிலிருந்து வின்சென்ட் ரோடு வழியாகவும், கனரக வாகனங்கள் செல்ல மதியில்லை. கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, டவுன்ஹாலில் இருந்து மணிக்கூண்டு வரை மற்றும் தேர் செல்லும் வழியில், வாகனங்கள், தள்ளு வண்டிகள் நிறுத்தக்கூடாது. மற்ற வழித்தடங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது நடைமுறையில் உள்ளது போல் செல்லலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.