Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சனிபகவான் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்! சனிபகவான் அருள்பாலிக்கும் ... பலன்கள்: துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் பலன்கள்: துலாம் | விருச்சிகம் | தனுசு | ...
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்கள்
பலன்கள் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 நவ
2011
15:16

மேஷம்(55/100)  கண்டச்சனி வந்தாச்சு!

மற்றவர்களின் நல்வாழ்விற்காக தங்கள் பங்கை முன்வந்து தரும் மேஷராசி அன்பர்களே!  உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் அனுகூலமாக இருந்த சனிபகவான், இப்போது ஏழாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 9, ராசி, 4 ஆகிய இடங்களை பார்க்கிறார். சனியின் பார்வைபெற்ற இந்த இடங்கள் சவுபாக்கியம், பிதா, உடல், மனம், வீடு, வாகன ஸ்தானங்கள் ஆகும். ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி அமர்வது சப்தமஸ்தான கண்டச்சனியாகும். கடந்த காலங்களில் பல்வேறு நற்பலன்களை வழங்கிய சனி,இப்போது உங்களின் நண்பர்கள் வகையில் கருத்து பேதங்களை உருவாக்குவார். சிறு அளவிலான உடல்நலக்குறைவு அவ்வப்போது ஏற்படும். கட்டுப்பாடான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் உடல்பலமும் மனபலமும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சம அந்தஸ்து உள்ள கிரகமான சுக்கிரன் வீட்டில் சனி உள்ளார். இதனால் ஆடம்பரச்செலவு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதால் மட்டுமே சமூகத்திலும், வீட்டிலும் நற்பெயரைக் காப்பாற்றலாம். இளைய சகோதரர்கள் தங்கள் செயல்திறனை வளர்த்துக் கொள்வதுடன் உங்களுக்கும் இயன்ற அளவில் உதவிபுரிவர். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணத்தில் மிதவேகம் தேவை. புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் வளர்ந்து கூடுதல் புகழ்பெறுவர்.

இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். நிதிநிலை சிறப்பாக அமையாது. பழைய கடன்களை அடைக்க தாமதமும், புதிய கடன் பெறுவதுமான நிலையும் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவு, தொழில் சம்பந்தமாக வெளியூர் இடமாற்றம் உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துக்களை புரிந்துகொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால், சனீஸ்வரனின் அருள்பார்வை கிடைக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் பேச்சு, விவாதங்களில் அளவுடன் நடந்துகொள்வது நன்மை தரும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற்று பங்குகளை வாங்குவதும், விற்பதும் நன்மை பெற உதவும். வெளியூர் பயணம் அனுகூல பலன் பெற்றுத்தரும்.

தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், பஸ், ரியல் எஸ்டேட், மலைத்தோட்ட பயிர் உற்பத்தி,பால்பண்ணை, ஏற்றுமதியாளர்கள், கல்குவாரி, காண்டிராக்ட் தொழில் செய்பவர்களும், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், அச்சகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் தொழிலில் வளர்ச்சிபெற மனஉறுதியுடன் செயல்படுவர். இருப்பினும் லாபம் சுமாராகவே இருக்கும். தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு கூடுதல் இடம் வாங்குவார்கள். தொழிலில் கூட்டுசேர வரும் வாய்ப்புக்களை சாதக, பாதகம் அறிந்து ஏற்கலாம். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, தானியம், காய்கறி, பழம், மருந்து, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பால் பொருள், சமையலறை சாதனங்கள், கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரி பாகம், தோல் பொருள் விற்பனை செய்வோர் ஆர்வமுடன் செயல்பட்டால் மட்டுமே இப்போதைய நிலவரத்தை தக்கவைக்கலாம். வாடிக்கையாளர்களின் மனப்பாங்கு உணர்ந்து பேசுவது நல்லது. சுமாரான லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுக்காக கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பொறுப்பேற்றால் சிக்கல் வரும். உங்கள் வேலையை மட்டும் கவனித்தால் வியாபாரம் இப்போதுள்ளதைப் போலவே இருக்கும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களின் பணித்திறமை பாதிக்கப்படலாம். சக பணியாளர்களின் உதவி கிடைக்காது. வருமானம் வழக்கமான அளவு இருக்கும். சிலருக்கு குறையும். அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் பெற வேண்டி வரும். நீண்டகால பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இருக்கும். தற்காலிக பணியாளர்களுக்கு மாற்று வேலை கிடைத்தாலும் வருமானம் சுமார் தான்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் மந்தநிலை காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாவர். வேலைப்பளு அதிகரிக்கும். வருமானம் போதுமான அளவு இராது. விண்ணப்பித்த கடன் தொகை தாமதமாகும். குடும்பப் பெண்கள் கணவரின் மனக்குறைக்கு ஆட்படாத வகையில் பொறுமையாகச் செயல்படுவது அவசியம். குடும்பச்செலவுக்கு போதுமான பணம் இருக்காது. சிக்கன நடைமுறை நற்பலன் தரும். உடல்நலத்தில் அக்கறை கொள்வது மருத்துவச் செலவைக் குறைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நன்றாக உழைத்தாலும் சுமாரான லாபமே பெறுவர். வெளியூர் பயணங்களால் நன்மை இருக்குமென்றால் மட்டுமே செல்லவும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், கம்ப்யூட்டர், வணிகவியல், அறிவியல், கலைத்துறை மாணவர்களுக்கு நினைவுத்திறன் குறைய வாய்ப்புள்ளது. கூடுதல் பயிற்சியினால் படிப்பில் தேர்ச்சி பெறலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதால் மட்டுமே பெற்றோரின் அதிருப்தியை தவிர்க்கலாம். சக மாணவர்களிடம் படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் கூடாது.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கை எப்பொழுதும் போல தொடரும். தனிநபர் விவகாரங்களில் தலையிடுவது, சமரசம் என்ற பெயரில் கட்டை பஞ்சாயத்து செய்வது ஆகியவற்றால் சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும், எதிரிகள் உங்களின் கஷ்டத்தை எதிர்பார்த்திருப்பர் என்பதால், தேவையற்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. பதவி பொறுப்பில் உள்ளவர்கள் அதிகாரிகளுடன் சச்சரவு செய்யக்கூடாது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனையில் சுமாரான நிலையை எதிர்கொள்வர்.

விவசாயிகள்: மகசூல் சுமாராக இருக்கும். விவசாயப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் செலவு ஏற்படும். மாற்றுப்பயிர் வளர்ப்புத் திட்டங்கள் பற்றி ஆலோசித்து செயல்படுத்தினால், வருமானத்தை ஓரளவாவது தக்க வைக்கலாம்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வில் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.
பாட வேண்டிய பாடல்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!.

சனி வக்ரகால பலன்

26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி, மீண்டும் கன்னிராசிக்கு இடம் பெயருகிறார். இந்த காலங்களில் எதிர்மறை பலன்கள் குறைந்து சுபபலன் நடக்கும். தொழில் வளர்ச்சி சீராகும். பணவரவு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். அரசு தொடர்பான அனுகூலம் கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. சமூக அந்தஸ்து உயரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு வந்து சேரும். அலைச்சல் குறையும்.

ரிஷபம் (90/100)      ஜமாயுங்க! ஜமாயுங்க!

திட்டமிட்டு செயல்களைச் செய்து வெற்றி பெறும் தன்மை கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து வாழ்வில் சாதகமற்ற பலன்களை தந்த சனிபகவான், இப்போது ஆறாம் இடமான துலாம் வீட்டிற்கு நற்பலன் வழங்கும் வகையில் பெயர்ச்சியாகி உள்ளார். சனிபகவான் தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 8, 12, 13-ம் இடங்களை பார்க்கிறார். சனியின் பார்வை பெற்ற இந்த இடங்கள் ஆயுள், சுபச்செலவு, புகழ் ஸ்தானங்கள் ஆகும். ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி அமர்வது உங்கள் வாழ்வில் பல்வேறு நன்மைகளைப் பெற வழி ஏற்படுத்தும். பேச்சில் இருந்த தயக்கம் குறைந்து எவரிடத்தும் சரளமாக பேசுவீர்கள். ஒத்திவைத்த பணிகளை விரைவாக நிறைவேற்றி நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய வீடு, வாகனம் திட்டமிட்டபடி வாங்குவீர்கள். தாய்வழி உறவினர் மதிப்புடன் நடத்துவர். புத்திரர்களின் செயல்பாட்டில் இருந்த குறை விலகி திறமை வளர்த்து முன்னேற்றம் பெறுவர். இஷ்ட தெய்வ அருள் பரிபூரண துணை நிற்கும். உடல்நலம் பலமாகும். கடனை அடைப்பீர்கள். எதிரிகள் வியந்து விலகும் வகையில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

உங்களின் ராசிநாதன் சுக்கிரனின் இன்னொரு ஆட்சி வீடான துலாம் வீட்டில், நட்பு கிரகமான சனிபகவான் அமர்வு பெற்றது மிகுந்த நன்மை தரும். உங்கள் நடை, உடை, பாவனையில் நேர்த்தி, வசீகரம் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகி நட்பு வளரும். தம்பதியர் ஒருவருக்கொருவர் நல்அன்பு பாராட்டி மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். உறவினர்களின் உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை தாராள செலவில் நடத்துவீர்கள். தந்தைவழி உறவினர்கள் தம்மால் இயன்ற உதவியை மனமுவந்து செய்வர். சொத்து சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் லட்சிய கனவு இனிதாக நிறைவேறும். விருந்து, உபசரிப்புகளில் சந்தோஷ மனமுடன் கலந்துகொள்வீர்கள். வெளியூர் பயணங்களை தகுந்த திட்டமிடுதலுடன் நிறைவேற்றி உயரிய நன்மை பெறுவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் திறமைமிகு செயலால் ஆதாய வருமானம் பெறுவர்.

தொழிலதிபர்கள்: ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், அரிசி ஆலை, அச்சகம், கல்வி நிறுவனம் நடத்துபவர்கள், கட்டுமானப் பொருட்கள், பால், மினரல் வாட்டர், வாசனை திரவியங்கள், மின்சார உபகரணங்கள், கண்ணாடி உற்பத்தி செய்பவர்கள் அமோக உற்பத்தி, தாராள பணவரவு கிடைக்கப்பெறுவர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு அதிக உற்பத்தியில் இறங்குவர். உபதொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டு. தொழில் சார்ந்த எதிர்ப்பு பெருமளவில் குறையும். வாகனம் வாங்க யோகம் உண்டு.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, காய்கறி, பழம், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் சாதனம், அலங்காரப் பொருள், குளிர்பானம், பூ, இறைச்சி, மருந்து விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் முன்னேற்ற சூழ்நிலையை அடைவர். மற்றவர்களுக்கும் சந்தையில் போட்டி குறைந்து லாபம் அதிகமாகும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான கடன் எளிதில் கிடைக்கும். புதிய கிளை துவங்கவும் சொத்து, வாகனம் வாங்கவும் யோகம் உண்டு.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறி நன்மதிப்பை பெற்றுத்தரும். சக பணியாளர்கள் நட்பு பாராட்டுவர். கடந்த நாட்களில் எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வீடு, வாகனக்கடன் பெறுவீர்கள். குடும்பத்தேவை பெருமளவில் நிறைவேறும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சீரான உடல்நலம் பெற்று பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேறும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு பெறுவதில் இருந்த சிரமம் விலகும். குடும்ப பெண்கள் தைரியத்துடன் செயல்படுவர். கணவர், குழந்தைகளின் மீதான அன்பு வளர்ந்து நற்பெயர் பெற்றுத்தரும். குடும்பச் செலவுக்கு தாராள பணவசதி இருக்கும். தாய்வழி சீர்முறை எதிர்பார்த்த அளவில் கிடைக்கும். கடந்த காலத்தில் நகை, பணத்தை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்திபணி செய்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும்.

மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், இதழியல், கேட்டரிங், கம்ப்யூட்டர், ரசாயனம், பவுதிக துறை மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறையினரும், ஆரம்பக்கல்வி படிப்பவர்களும் உயர்ந்த மார்க் பெறுவர். படிப்புச்செலவுக்கு தாராள பணவசதி கிடைக்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். படிப்பு நீங்கலான பிற பயிற்சிகளையும் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பரிசும், பாராட்டும் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் ஈடுபடுவதில் உற்சாகம் ஏற்படும். எதிர்ப்பு குறைந்து அனுகூலம் கிடைக்கும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். அரசு தொடர்பான எதிர்பார்ப்பு நிறைவேறும். விரும்பிய பதவி, பொறுப்பு வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். எதிரிகள் சிரமம் காரணமாக இடம்மாறிப் போவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ்வும் உண்டு. திட்டமிட்டபடி வாகனம், வீடு வாங்குவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்னையில் முன்னேறி ஆதாய பணவரவு பெறுவர்.

விவசாயிகள்: விளைச்சலில் சாதனை செய்வீர்கள். விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னை சரியாகும். கூடுதல் நிலம் வாங்கவும் யோகம் உண்டு. கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்துவீர்கள்.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் மனஉறுதியும் செயல் வெற்றியும், மங்கல நிகழ்வும் உண்டாகும்.

பாட வேண்டிய பாடல்

நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்; வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே

சனி வக்ரகால பலன்

26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த காலத்தில் அனுகூல பலன் குறைந்து எதிர்மறை சிந்தையும் செயல்களும் இருக்கும். அலட்சிய பேச்சால் நல்லவர்களின் அன்பு, உதவியை பெற இயலாமல் போகும். குடும்பத்தில் சச்சரவு உருவாகும். கவனம். தொழில் வளர்ச்சிப்பணிகளும் பின்தங்கும். பணவரவில் தாமதம், அதிக செலவு ஆகிய சூழ்நிலை இருக்கும். இந்த சமயத்தில், புத்திரர்களின் செயல்பாடுகளைக் கவனித்து ஒழுங்கு செய்வது அவசியம்.

மிதுனம்(60/100)   புண்ணியம் செஞ்சிருந்தா தப்பிக்கலாம்!

மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்ந்து காட்டும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்த சனிபகவான், இப்போது ஐந்தாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 7, 11, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார். கடந்த காலங்களில் சனியின் அமர்வினால் பல்வேறு இடையூறுகளை அனுபவித்தீர்கள். இப்போது நிலைமை கொஞ்சம் சீரடைந்தாலும் பிள்ளைகள் மற்றும் பூர்வ சொத்து வகையில் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பதால், கடந்த காலங்களில் செய்த புண்ணியத்திற்கேற்ப பலன் கிடைக்கும். நட்பு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் நண்பர்களிடம் இருந்த சுமூக உறவில் குளறுபடி ஏற்படும். பேச்சில் நிதானமும் இரக்க குணமும் பின்பற்றுவது அவசியம். கோபத்தால் கடுமையாகப் பேசி பிரச்னைகளை சந்திக்கலாம். இளைய சகோதரர்கள் ஓரளவுக்கு உதவுவர். வீடு, வாகன வகையில் சிறு அளவிலான மாற்றம் செய்வீர்கள். புத்திரர்கள் உங்களின் சொல்லை மதித்து நடப்பதில் முரண்படுவர். இதனால் குடும்பத்தில் சச்சரவு, நிம்மதி குறைவு ஏற்படும். அவர்களை கண்டித்தும், அன்புகாட்டியும் நல்வழி நடத்துவதால் ஓரளவு நன்மை கிடைக்கும்.

சொத்து பராமரிப்பு, பாதுகாப்பில் கவனம் வேண்டும். பத்திரங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் சீராக இருக்க தகுந்த சிகிச்சை நல்லது. தம்பதியர் கருத்து பேதங்களுக்கு உட்படுவர். விட்டுக்கொடுத்து நடப்பதால் பிரிவினையில் இருந்து தப்பலாம். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் தகுதிக்கு மீறிய பரிவர்த்தனை கூடாது. பாதுகாப்பு குறைவான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும். ஆடம்பர நாட்டத்தால் பெரிய அளவில் கடன்சுமை வரும் நிலை உள்ளது. கவனம். தந்தைவழி உறவினர்களில் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவர். பணவரவு சுமார் என்பதால், சேமிப்பு பணம் கரையும் நிலை இருக்கிறது. பங்குச்சந்தையில் உளளவர்கள் முதலீடு விஷயத்தில் கவனம். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை, ரியல் எஸ்டேட், அச்சகம் நடத்துவோர், ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சிப்பணியை மேற்கொள்வர். மற்றவர்களுக்கு கடந்தகால இடையூறு விலகி உற்பத்தி அதிகரிக்கும். சுமாரான லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்ய புதிய முயற்சி எதுவும் வேண்டாம். நிலுவை பணவரவு பெற இதமான அணுகுமுறை உதவும். தொழிற்சாலைகளில் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஸ்டேஷனரி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், ஆட்டோமொபைல் உதிரிபாகம், இறைச்சி, காய்கறி, பழங்கள், பூ, பட்டாசு, மருந்து விற்பனை செய்பவர்கள் புதிய மாற்றங்களை கொண்டுவரும் பணியில் ஈடுபடுவர். லாபம் சுமார். மற்றவர்கள் இவர்களை விட கூடுதல் லாபம் பெறுவர். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் அதிகரிக்கும். கடன்களை ஓரளவு அடைப்பீர்கள். பிறருக்காக தகுதிக்கு மீறிய பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் நிலவிவந்த குழப்ப சூழ்நிலை சரியாகும். உற்சாகமாகப் பணிபுரிந்து நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவீர்கள். ஆனால், கடுமையாக உழைத்தும் ஒன்றும் மிஞ்சவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். சக பணியாளர்களின் பணித்திறமை அல்லது பணிக் குறைபாடு பற்றி விமர்சனம் செய்வதை தவிருங்கள். கடன்கள் சிரமம் தரும் சூழ்நிலை இருக்கிறது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணியை செவ்வனே நிறைவேற்றுவர். ஆனால், சலுகைகள் கிடைக்க கால தாமதமாகும். பயிற்சிக்காக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். குடும்ப பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்வர். அமைதியைக் கடைபிடித்தால் ஆனந்தம் உண்டு. குடும்பத்திற்கான முக்கிய செலவுகளை ஏற்பதால் மட்டுமே கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் மாற்றங்களைக் கொண்டு வருவர். கடுமையான உழைப்பின் பேரில் இருக்கிற லாபத்தை தக்க வைக்கலாம்.

மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங்,விவசாயம், வங்கியியல், வணிகவியல், மேனேஜ்மென்ட் படிப்பு, கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி, இதழியல், கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் படிப்பதில் இருந்த மந்தநிலை மாறி ஆர்வம் வளரும். மற்ற துறையினரும், ஆரம்பக்கல்வி மாணவர்களும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டால் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறலாம். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் சிரமங்களை சரிசெய்வதில் கவனம் கொள்வீர்கள். செலவு அதிகரிக்கும். ஆதரவாளர்களின் நம்பிக்கை மனதிற்கு ஊக்கம் தரும். அரசு தொடர்பான காரியம் அதிகாரிகளின் உதவியால் நிறைவேறும். அரசியல் பணிக்கு புத்திரர்களைப் பயன்படுத்தினால் கெட்ட பெயர் வரும். எதிரிகள் பாடாய் படுத்துவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு உற்பத்தி, விற்பனை அதிகரித்தாலும் பொருள் தேக்கத்தால் லாபம் இராது.

விவசாயிகள்: பயிர் வளர்க்க புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவீர்கள். பயிர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் தாராள பணவரவும் உண்டு. நிலம் தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கடாது.

பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில், பணி மந்தம் விலகி கூடுதல் பணவரவு கிடைக்கும்.

பரிகாரப் பாடல்

திருமகளே! திருப்பாற்கடலூடு அன்று தேவர் தொழ
வருமகளே! உலகெலாம் என்றென்றும் வாழ வைக்கும்
ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று, வரம் பெரிது
தருமகளே! தமியேன் தலைமீது நின்தாள் வையே

சனி வக்ரகால பலன்

 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் உங்கள் வாழ்வியல் நடைமுறையில் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். வீண் செலவுகளுக்காக பணத்தேவை அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் விபத்து வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்களிடம் இதமாக நடப்பது நல்லது. தொழில் வகையில் இருந்த தாமதம் விலகி, சுமாரான பணவரவு கிடைக்கும். மனச்சுமை குறையும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

கடகம் (50/100)    அர்த்தாஷ்டம சனி புடிச்சாச்சு!

நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்கும் ஞானக்கடலான கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மிக அனுகூலமாக இருந்த சனிபகவான் ராசிக்கு நான்காம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். சனியின் அமர்வு உங்களுக்கு அர்த்தாஷ்டமச்சனி என்ற நிலையை தருகிறது. அஷ்டமச்சனி என்ற எட்டாம் இடத்து சனி, ஏழரை சனியை விட கடும் துன்பம் தரும் என்பார்கள். அர்த்தம் என்றால் பாதி. அதில் பாதி கஷ்டத்தை தருவார் சனி. அவர் தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 6, 10, ராசி ஆகிய இடங்களான எதிரி, தொழில், தன்செயல் ஸ்தானங்களை பார்க்கிறார். இதனால் பேச்சில் நிதானத்தையும், செயல்பாடுகளில் நியாய தர்மத்தையும் கடைபிடிப்பது நன்மை தரும். சமூக அந்தஸ்தை குறைக்கும் முயற்சியில் சனி சோதிப்பார். அதில் இருந்து சாமர்த்தியமாக மீள்வது உங்கள் பொறுப்பு. தம்பி, தங்கை உங்களின் சிரம சூழ்நிலையில் தகுந்த ஆதரவும், பணஉதவியும் தருவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் கொள்வதால் விபத்து வராமல் தவிர்க்கலாம். புத்திரர் படிப்பு, பிற தேவைகளுக்கு அதிக செலவுக்கு உட்படுவர். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் மனக்கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். பூர்வ சொத்தில் சுமாரான பணவரவு இருக்கும். எதிரிகளின் தொந்தரவு பெருமளவு குறையும். உற்சாகம் சற்று குறைந்து மந்தநிலை ஏற்படும். இதனால் உங்கள் செயல்பாடுகளில் இதுவரை இருந்த வீரியம் சற்று குறையும். உடல்நலம் சுமாராக இருக்கும். தம்பதியர் குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். நண்பர்கள் உதவுவது, உதவி பெறுவதுமான நன்மை இருக்கும். சிலருக்கு வீடு, தொழில் இடமாற்றம் உருவாகும். வீடு, கார் உள்ளிட்ட வசதிகளை பெறுவதில் தாமதம் உண்டு. பங்குச்சந்தையில் உள்ளவர்கள் அளவான முதலீடு செய்வது அவசியம்.

தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, ஓட்டல், லாட்ஜ், கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ் நடத்துவோர், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், குளிர்பானம், மின்சார மின்னணு சாதனம், உற்பத்தி செய்பவர்கள் உற்பத்தியை பெருக்குவதிலும் தரத்தை சீராக்குவதிலும் கவனமாக செயல்பட வேண்டும். அளவான உற்பத்தி, மிதமான லாபம் என்கிற நிலை இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு நிர்வாகச் செலவு கூடும். திறமை நிறைந்த பணியாளர்களை நியமித்து ஆலோசனை பெற்று உற்பத்தியை சீராக்கிக் கொள்ளலாம். மூலதனத்திற்காக அளவுக்கு மீறிய கடன் பெறக்கூடாது.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மருந்து, கட்டுமானப் பொருள், விவசாய இடுபொருள், உணவுப்பண்டம், பழம், காய், மலர், இறைச்சி, வாசனை திரவியம், அழகு சாதனம், சமையலறை சாதனங்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கடும் போட்டியை சந்திப்பதால், லாபக்குறைவு ஏற்படும். பிற வியாபாரிகளுக்கு கடை வாடகை, ஊழியர் சம்பளம், விரிவாக்கம் போன்ற பணிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் செலவாகி லாபவிகிதம் குறையும். வாகன பராமரிப்பு செலவு கூடும். பாக்கப் பணத்தை வசூலிப்பதில் கெடுபிடி செய்தால் சிக்கலை சந்திக்க நேரிடும். சக வியாபாரிகளின் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் குளறுபடி, கடுதல் பணிச்சுமை என்ற சூழ்நிலையை எதிர்கொள்வர். சிலர் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாகி பணியிட மாற்றம், சலுகை பெறுவதில் தாமதம் என்ற நிலை அடைவர். டிரைவர் பணியில் உள்ளவர்கள் அவசர காரணம் இருந்தாலும் நிதானம் மற்றும் கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. சக ஊழியர்களின் ஆறுதலான பேச்சு உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள், மந்தம் காரணமாக பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். நிர்வாகம் சொல்வதை அப்படியே செய்தால், பிரச்னைகளில் இருந்து தப்பலாம். சக பணியாளர்களில் நல்லவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவது நல்லது. சிலருக்கு பதவி குறைப்பு, வெளியூர் மாற்றம் இருக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பு, பாசம் கிடைக்கும். வீட்டுக்குச் செலவுக்கான பணவசதி சுமாராகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடும் உழைப்பால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். பிரிண்டிங் டெக்னாலஜி, ஜர்னலிசம், சட்டம், கம்ப்யூட்டர், கலைத்துறை, அறிவியல் துறை மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல், ஞாபகத் திறன் குறைவு ஏற்படும். மற்ற துறையினருக்கு சக மாணவர்களில், சிறந்த படிப்பாளிகளின் உதவியுடன் படிப்பதால் தரதேர்ச்சி உயரும். விளையாட்டுப் பயிற்சியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். படித்து முடித்து வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு ஓரளவு அனுகூலம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களே உங்களை எதிர்ப்பர். அவர்களைச் சரிக்கட்ட அதிக செலவாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் அதிக சிரமம் ஏற்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் ஓரளவே லாபம் பெறுவர். சிலர் சட்ட சிக்கல்களையும் சந்திக்கக் கூடும். கவனம்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற பணம், அதிகாரிகளின் உதவி கிடைத்தல் என்ற வகையில் குறுக்கீடுகளை எதிர்கொள்வீர்கள். மகசூல் சிறந்து எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கவனம் வேண்டும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சிரமம் குறையும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் வாழ்வில் எதிர்ப்பு குறைந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரப் பாடல்

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! கர பூபதியே.

சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயருகிறார். இதனால் உங்கள் வாழ்வியல் நடைமுறையில் முன்னேற்றம் தருகிற மாற்றம் உருவாகும். துவங்கிய காரியம் வெற்றி பெறும். பசு, பால் பாக்ய யோகம் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். உடல்நலம் பலம்பெறும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டு. அரசு தொடர்பான செயல்பாடுகள் அனுகூலமாக நிறைவேறும். கடனை கணிசமான அளவில் அடைப்பீர்கள்.

சிம்மம் (80/100)   ஹைய்யா! ஏழரை போயாச்சு!

நினைத்ததை வெற்றிகரமாக நடத்த, கடினமாக உழைக்கும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த சனிபகவான் ஏழரைச் சனி என்ற நிலையில் இருந்து உங்களை விடுவிக்கிறார். ராசிக்கு மிக அனுகூலமான மூன்றாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். கடந்த காலங்களில் இருந்த துன்பச்சுமை குறைந்து நல்ல பலன்களை பெறுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் புத்திரர்கள் வகையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அவர்களின் படிப்பு, பிற வகை திறமைகள் வளம்பெறும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருளாதார வசதி கணிசமான அளவில் கிடைக்கும். பிறரிடம் கடினமாக பேசுவதை தவிர்த்து அன்பு, கருணை, சிந்தனையுடன் பழகுவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் கிடைக்கும். ராசிநாதன் சூரியனுக்கு பகை கிரகமான சுக்கிரன் வீட்டில், இன்னொரு பகை கிரகமான சனி அனுகூலமாக அமர்ந்துள்ளார். இதனால் பகைவர்களிடமும் நன்மை பெறும் வகையில் அனுகூல சூழ்நிலை உருவாகும். புதிய சொத்து வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரணமாக துணைநிற்கும். சமூகப்பணியில் தாராளமாக செயல்பட்டு அபரிமிதமான புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். இளைய சகோதரர்கள் உற்ற துணையாக இருந்து உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான பணி செய்வர். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அன்பு, பாசத்துடன் இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்வும் நிறைந்திருக்கும். நண்பர்களின் நன்மதிப்பைப் பெற்று உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். ஆபத்து எதுவும் அணுகாத பாதுகாப்பு நிறைந்த நல்வாழ்வு பெறுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான சகல வசதியும் எளிதாக கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி அதிக முன்னேற்றம், தாராள பணவரவு பெறுவீர்கள். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் நுணுக்கமான நடைமுறையை பின்பற்றி எதிர்பாராத அளவில் லாபம் காண்பர்.

தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், மின்சார, மின்னணு பொருட்கள் தயாரிப்போர், பர்னிச்சர், அச்சகம், அரிசி ஆலை, பால்பண்ணை, ஆட்டோமொபைல்ஸ், கடல்சார் பொருட்கள், மினரல் வாட்டர், அழகு சாதனப் பொருள், வாசனை திரவியம், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் கூடுதல் ஆர்வமுடன் செயல்படுவர். உற்பத்தியும் தரமும் உயரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. உபதொழில் துவங்க அனுகூலம் வளரும். சொத்து, வாகனச் சேர்க்கை உண்டு.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, பால்பொருள், மின்சார, மின்னணு பொருட்கள், மீன், இறைச்சி, செல்லப்பிராணி, அலங்கார பொருள், பட்டாசு, கட்டுமானப் பொருள், எண்ணெய், பேக்கரி பொருள் விற்பனை செய்பவர்கள் விற்பனை அதிகரித்து கூடுதல் லாபவிகிதம் பெறுவர். மற்றவர்களுக்கு அதிக லாபத்துடன் புதிய கிளை துவங்கும் திட்டமும் நிறைவேறும். வியாபார சங்கங்களில் அந்தஸ்து உள்ள பதவி கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. கடை நிர்வாகத்தில் பிறரை அனுமதிக்க வேண்டாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருமுகத்தன்மை மற்றும் திறமையுடன் செயல்படுவர். பணி சிறந்து பாராட்டு, சலுகைகள் கிடைக்கும். பணவரவு அதிகரித்து குடும்பத்தேவையை பெருமளவில் நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் உங்கள் மீது நன்மதிப்பு, மரியாதை கொள்வர். நண்பர்களின் உதவி, ஆலோசனை திறமையை வளர்க்க உதவும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு நிலுவைப் பணியை நிறைவேற்றுவர். தகுதி, திறமை வளர்ந்து பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் வந்துசேரும். குடும்பப் பெண்கள் பொறுமை நிறைந்த செயல்களால் கணவர், உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களை ஒழுங்கு செய்வதில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் தாராள உற்பத்தி கிடைத்து அபரிமிதமான பணவரவு பெறுவர். சேமிப்பு உயர்வதால் மனதில் தன்னம்பிக்கை வளரும்.

மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், இன்ஜனியரிங், கம்ப்யூட்டர் ஜர்னலிசம், ஆசிரியர் பயிற்சி, சட்டம், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், துறை சார்ந்த மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வர். மற்ற துறை மாணவர்களும், ஆரம்பக்கல்வி மாணவர்களும் தரத்தேர்ச்சி உயர்ந்து ஆசிரியர், பெற்றோரிடம் நன்மதிப்பை பெற்றுவர். வேலைவாய்ப்பு பெறுவதில் கூடுதல் முன்னுரிமை உண்டு. சக மாணவர்களின் அன்பு, நட்பு கிடைத்து உற்சாகம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றி ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகள் அதிகாரிகளின் சிறப்பு கவனத்துடன் எளிதாக நிறைவேறும். சிலருக்கு கூடுதல் பதவிப்பொறுப்பு கிடைக்கும். புத்திரரின் செயல்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லை பெருமளவில் குறையும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி வருமானம் காண்பர்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவு பெறுவீர்கள். கால்நடை பராமரிப்பில் இருந்த குறை நீங்கி வளர்ச்சி ஏற்படும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது நவக்கிரக சந்நிதியிலுள்ள குரு பகவானை வழிபடுவதால் புகழும், தொழில் முன்னேற்றமும் உண்டாகும்.

பரிகாரப் பாடல்

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்த்ரி
நறைசொரி கற்பகப் பொன்நாட்டினுக்கு
அதிபனாகி நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாழன்
இணையடி போற்றி போற்றி!

சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம்பெயருகிறார். இதனால் சுமார் ஆறுமாத கால அளவுக்கு ஏழரைச்சனி என்கிற நிலை திரும்பவும் தொடரும். இந்த நேரத்தில் பேச்சில் நிதானமும் கண்ணியமும் பின்பற்றுவது அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். கண் தொடர்பான பிணி சிகிச்சையினால் சரியாகும். ஆதாய பணவரவில் தேக்கநிலை இருக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கன்னி (55/100) ஏழரையின் கடுமை குறையும்!

உழைப்பிலும் சேமிப்பிலும் ஆர்வமுள்ள கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் ஜென்மச்சனியாக (ஏழரைச்சனி) இருந்த சனிபகவான், இப்போது ராசிக்கு இரண்டாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இது ஏழரைச் சனியின் கடைசி காலகட்டம். இன்னும் மூன்றாண்டுகள் ஏழரை காலத்தை அனுபவிக்க வேண்டிய பாக்கிய இருக்கிறது. தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 4, 8, 11 ஆகிய இடங்களை சனீஸ்வரர் பார்க்கிறார். ராசிநாதன் புதனுக்கு நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் சனி அமர்வது, நண்பர்களிடம் உங்களுக்கு புதிய மரியாதையை பெற்றுத்தரும். கடந்தகாலத்தில் உங்கள் மனதில் இருந்த தயக்கம், கஷ்டம், செயல்களில் இருந்த குளறுபடி சரியாகும். நியாய, தர்மங்களை பின்பற்றி பேசி சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் பாசத்துடன் நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் இருக்கிற வசதியை முறையாக பயன்படுத்துவது போதுமானது. வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் மட்டுமே விபத்து அணுகாத நன்னிலை தொடரும். கடன் கிடைக்கிறதென்று வீட்டில் புதிய கட்டடம் கட்டுவதில் ஈடுபட வேண்டாம். தாய்வழி உறவினர்களிடம் சிறு அளவிலான கருத்து வேறுபாடு வந்து பின்னர் சரியாகும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஏதுவான நிலை உண்டு.

புத்திரர்களின் பணியால் கிடைக்கிற வருமானம் உங்கள் குடும்ப நிகழ்கால தேவைக்கும், எதிர்கால சேமிப்புக்குமாக பயன்படும். உடல்நலத்தை பேணுவதிலும் கண்களின் பாதுகாப்பிலும் கூடுதல் அக்கறை அவசியம். எதிரிகளின் கெடுசெயல் சிரமம் தந்தாலும் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவு கொள்வீர்கள். பூர்வசொத்தில் பெறுகிற வருமானத்தை தர்ம காரியங்களுக்கு செலவிடுவது நல்லது. கணவன், மனைவியடையே இருந்து வரும் கருத்து பேதம் தொடரும். சமாதானத்தை பின்பற்றுவதால் மட்டுமே குழப்பம் இல்லாத நிலை தொடரும். நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் சிரமம் விலகி வளர்ச்சி தருகிற புதிய பாதை திறக்கும். கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் அளவான முதலீட்டில் அதிக வருமானம் பெறுகிற அதிர்ஷ்டகரமான நிலையைப் பெறுவர்.

தொழிலதிபர்கள்: பள்ளி, கல்லூரி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மருத்துவமனை நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், அச்சகம், ஆட்டோமொபைல், கட்டுமானப் பொருள், மின்சார சாதனம், நவீன பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், மருத்துவ உபகரணம் உற்பத்தி செய்பவர்கள் பணவரவை அதிகப்படுத்தும் எண்ணத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவர். ஆனாலும், எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இராது. வெளியூர் பயணம் அதிகரிக்கும். நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை அதிகப்படுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருக்காது.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, எண்ணெய், மருந்து, மின்சார, மின்னணு சாதனம், கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காய்கறி, மலர், இறைச்சி, விவசாய இடுபொருட்கள், பட்டாசு, பேக்கரி பொருட்கள், உணவு பண்டங்கள் விற்பனை செய்பவர்களுக்கு வியாபாரம் சுமாராகவே இருக்கும். மற்றவர்களும், இருக்கிற விற்பனையைத் தக்க வைக்க லாப விகிதத்தை குறைத்து விற்பனை செய்வர். சரக்கு குடோன்களில் தீயணைப்பு கருவி அமைப்பது பாதுகாப்பாக இருக்கும். வியாபார அபிவிருத்திக்காக தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது திறமையைப் பயன்படுத்தி பணி சிறக்க மாற்றங்களை பின்பற்றுவர். பணி இலக்கு நிறைவேறி அனுகூல பலன் கிடைக்கும். ஆனால், வரவைவிட குடும்ப செலவுகளுக்கான தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. சக பணியாளர்களிடம் சச்சரவு வளராத அளவிற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கல், பொருட்களை இரவல் பெறுதல் ஆகியவற்றாலும் சிரமம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அலுவலகத்தில் கடன் பெறுதல், சேமிப்பு பணத்தை எடுத்தல் என்ற வகையில் செலவாகும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே குளறுபடி வராமல் தவிர்க்கலாம். இரக்க சிந்தனையுடன் பிறருக்கு பணம் கொடுத்து உதவுவதால், திரும்ப பெறுகிற நேரங்களில் வீண் சிரமம் ஏற்படும். கவனம். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்வர். குடும்ப நலன் கருதி சகிப்புத்தன்மை பின்பற்றுவதால் பிரிவு ஏற்படாமல் ஒற்றுமை வளரும். வீட்டுச் செலவுக்கு திண்டாட்டமாக இருக்கும் என்பதால் சிக்கனம் நல்லது. தாய்வழி உறவினர்களிடம் அதிருப்தி ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமிடுவது நல்லது. கடுமையாக உழைத்தாலும் உற்பத்தி, விற்பனை சுமார் தான்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், வங்கியியல், வணிகவியல், மார்க்கெட்டிங், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர், பிரிண்டிங் டெக்னாலஜி, ஜர்னலிசம், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆரம்பக்கல்வி மாணவர்கள் படிப்பில் சிறிது மந்தநிலைக்கு உட்படுவர். மற்ற துறை மாணவர்கள் பெற்றோரின் கண்டிப்பு, ஆசிரியரின் நல்வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் மட்டுமே சிறப்பான தேர்ச்சியைப் பெற முடியும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சக மாணவர்களிடம் விலைமதிப்புள்ள பொருள் எதுவும் இரவல் வாங்கக்கூடாது.

அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பேச்சில் நிதானமும், இனிய சொல் பயன்படுத்துவது மட்டுமே நன்மை தரும். ஆதரவாளர்கள் உரிய மரியாதை தருவர். எதிரிகளால் தொந்தரவு இருந்தாலும் பெரிய அளவிலான பாதிப்பு வராது. அரசு அதிகாரிகள் உங்கள் கோரிக்கைக்கு முன்னுரிமை தருவர். நடைமுறை செலவுகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படும். வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான உற்பத்தி, விற்பனையும் அதற்கேற்ப லாபமும் காண்பர்.

விவசாயிகள்: விவசாய பணிகளைச் செய்வதில் மந்தநிலை ஏற்படும். மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் அதனால் கிடைக்கிற பணவரவும் பற்றாக்குறையை சரிக்கட்டும். சொத்தின் பேரில் தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது.

பரிகாரம்:  சாஸ்தாவை வழிபடுவதால் துன்பம் குறைந்து வாழ்வில் இன்பம் வளரும்.

பரிகாரப் பாடல்

புவிகாக்கும் இருவர் வயிற்றில்
பூலோகம் காக்க பிறந்தவரே!
மலைக்கு வரும் பக்தர்
மனதில் சரணமாய் ஒலிப்பவரே!
சங்கடம் நீக்கி அருள்புரியும்
சம்சாரக் கடல் கடந்தவரே!
பிரம்மச்சர்ய குலவிளக்கே!
பிரம்மனின் கெடுவிதியை மாற்றுவீரே!

சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம் பெயருகிறார். இதனால் உங்களுக்கு ஜென்மச்சனி என்கிற நிலை ஆறு மாத கால அளவில் இருக்கும். இதுகாலத்தில் மனதில் இறுக்கமான சூழ்நிலையும் செயலில் குளறுபடியான தன்மையும் இருக்கும். சமூக மதிப்புக்கு பங்கம் ஏற்படும். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் அதிகரிக்கும். பணத்தேவையை சரிசெய்ய சேமிப்பை பயன்படுத்துவீர்கள். புத்திரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய நிலை இருக்கும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் »
temple

தலைமை நீதிபதி  சனி பகவான்: மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக ... மேலும்

 
temple

நவகிரக மண்டலத்திலுள்ள சனிக் கோளின் வானவியல் ஆய்வு

குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் ... மேலும்

 
temple

சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடம் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் சாரம் சனி; ... மேலும்

 
temple

சனிபகவானும், விநாயகரும்: ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், ... மேலும்

 
temple

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.