பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
01:06
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் காளியம்மன் கோவிலில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா நேற்று துவங்கியது.
அதையொட்டி, பல்வேறு வகைகளில் தலா ஆயிரம் மாம்பழம், எலுமிச்சை, ஆப்பிள், சாத்துக்குடி மற்றும் மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு மற்றும் இனிப்பு வகைகள், மலர்கள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக அளித்தனர். அதையடுத்து, அபிராமி அம்மன் சமேத ராஜசோளீச்சுரமுடையார் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆயிரம் ஆயிரம் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வரும் வைபவம் நடந்தது. இன்று (7ம் தேதி) அதிகாலை, சீர்வரிசையாக கொண்டு வரப்பட்ட பழங்கள், மஞ்சள், இனிப்பு வகைகளை அம்மனுக்கு படையல் இட்டு, தீபாராதனை நடக்கிறது.7 மற்றும் 8ம் தேதி ஆகிய இரு நாட்களில் அம்மனை வழிபாடு செய்யலாம். அதன்பிறகு, மீண்டும் அம்மனை பெட்டியில் ஸ்தாபிதம் செய்வார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழா என்பதால், காரைக்கால் மட்டுமின்றி, சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழகப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்ய காரைக்காலில் குவிந்துள்ளனர்.