பதிவு செய்த நாள்
06
டிச
2011
11:12
சபரிமலை : சபரிமலையில் இவ்வாண்டுக்கான மண்டல பூஜை, வரும் 27ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சித்திரை திருநாள் மன்னர், அய்யப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கியை வைப்பார். அது மூலவருக்கு அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெறும்.
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில், பிரசித்திப் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், நவம்பர் மாதம் துவங்கி, டிசம்பர் மாதத்தில் அதாவது மார்கழி மாதம், மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான மண்டல பூஜை உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நவ., 16ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவத்திற்கான சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மண்டல பூஜை, வரும் 27ம் தேதி, பிற்பகல் 1 மணி முதல், 1.30 மணிக்குள், தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் நடைபெறும். பூஜையின் போது, சுவாமிக்கு அணிவிக்கப்பட உள்ள தங்க அங்கியை, பம்பை வழியாக, சித்திரை திருநாள் மன்னர் எடுத்து வருவார். வரும் 26ம் தேதி சரங்குத்தி பகுதியில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும், பக்தர்களும் தங்க அங்கியை வரவேற்று, சரண கோஷங்களுடன் ஊர்வலமாக, அன்று மாலை சபரிமலை கொண்டு வருவர். சன்னிதியில் அளிக்கப்படும் தங்க அங்கி, மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.