பதிவு செய்த நாள்
06
டிச
2011
11:12
ஈரோடு: ஈரோடு லக்காபுரத்தில் நடந்த கந்தூரி விழாவில், ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.ஈரோடு லக்காபுரம், கந்தூரிகாட்டில் சுமார் 150 ஆண்டுக்கு முன், மர்மமான நோயால் மக்கள் இறந்தனர். அதிர்ச்சியடைந்த முஸ்லீம்கள், பெரிய பள்ளிவாசல் ஹஸ்ரத் பிலால் என்ற மதகுருவின் உதவியை நாடினர். ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வனவாசம் சென்று, ஏழை, எளிய மக்களுக்கு உணவு படைத்தால், நோய் தீரும், இறப்பு குறையும் என்று மதகுரு தெரிவித்தார். மதகுருவின் அறிவுரையை பின்பற்றியதால், பிணியும், இறப்பும் குறைந்தது. அன்று முதல், கார்த்திகை மாதத்தில், ஈரோடு, லக்காபுரத்தில் கந்தூரி விழா நடத்துவதை, முஸ்லீம்கள் வழக்கமாக கொண்டனர்.நடப்பாண்டு, நேற்று லக்காபுரத்தில் நடந்த விழாவில், விழா தலைவர் ஜியாவுதீன், அபுதாஹீர், முகம்மது ஹர்சத், நாசர், முத்துபாவா உள்ளிட்ட பலர் முன்னிலை பங்கேற்றனர். பழ வகைகள், உணவு வகைகள் படைக்கப்பட்டு, முகமது உஸ்மான் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. அதன் பின் சமைக்கப்பட்ட உணவு வகைகளை ஏழை எளிய மக்களுக்கு, முஸ்லீம்கள் வழங்கினர்.இவ்விழாவில், ஈரோடு, பவானி, பி.பி.அக்ரஹாரம், கோபி, பெருந்துறை, கொடுமுடி, கரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.