கோயிலுக்கு திரும்பிய அழகருக்கு திருஷ்டி கழித்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2019 11:04
அலங்காநல்லுார்: மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்றுவிட்டு கோயிலுக்கு திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி வரவேற்றனர். அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் தொடங்கியது. 17ம் தேதி கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். 18ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. 19ம் தேதி காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார். வண்டியூர், ராமராயர் மண்டபத்தில் தங்கி சேஷ, கருட வாகனத்தில் எழுந்தருளியும், தசாவதாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றும் 21ம் தேதி இரவு பூப்பல்லக்கில் புறப்பட்டார்.
நேற்று பகல் 12:00 மணிக்கு கோட்டைவாசல் பகுதிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்மலைக்கு சுவாமி திரும்பினார். இதையொட்டி 18ம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு விசேஷ பூஜைகளுடன், வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின் வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோயில் யானை சுந்தரவள்ளி முன் செல்ல தங்கபல்லக்கு கோயிலுக்குள் சென்றது. அங்கு பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷத்துடன் சுவாமிக்கு வண்ணமலர்கள் துாவி வரவேற்றனர். பின் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றிய பெண்கள் சுவாமியை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளார்கள் செய்திருந்தனர்.