திருக்குறுங்குடி கோயிலில் 5 நம்பிகள் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2012 10:03
களக்காடு : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி திருவிழாவில் நேற்று 5 நம்பிகளும் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம் நடந்தது. திருங்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த 8ம் தேதி காலை ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா சென்று வருகிறார். 5ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் இரவு கருட வாகனத்தில் 5 நம்பிகளும் வீதிஉலா வந்தனர். நேற்று அதிகாலை மேலரதவீதியில் 5 நம்பிகளும் சித்த மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 5 நம்பிகளும் கோயிலுக்குள் எழுந்தருளினர். இதில் திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நம்பியை தரிசனம் செய்தனர். 10ம் திருநாளான வரும் 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைக்கிறார். திருவிழாவை முன்னிட்டு தினமும் இன்னிசை கச்சேரி, சமய சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.