சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: சரண கோஷங்களுடன் பக்தர்கள் பரவசம்

ஜனவரி 14,2022



சபரிமலை: பொன்னம்பல மேட்டில் பிரகாசித்த ஜோதியை சபரிமலையில் கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷங்களுடன் பக்தி பரவசத்துடன் வணங்கி மலை இறங்கினர்.

கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. காலை 4:00 மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள்நடைபெற்றது. பகல் 12:30 மணிக்கு உச்சபூஜை நடைபெற்றது. இந்த பூஜை முடிந்த உடன் நடை அடைக்கப்படும். ஆனால் மகர சங்கராந்தி பூஜைக்காக தொடர்ந்து நடை திறந்திருந்தது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு சென்ற பகல் 2:29 மணிக்கு மகர சங்கராந்தி பூஜை நடைபெற்றது. சிறப்பு வாய்ந்த இந்த பூஜையின் போது திருவிதாங்கூர் மன்னரின் கவடியார் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்பட்ட நெய் தேங்காயை உடைத்து ஐயப்பன் விக்ரகத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் செய்தார். 2:45 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

பின்னர் மாலை 5:00மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி நேற்று மாலை 5:40 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6:35 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6: 40-க்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. சில வினாடிகளில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதி தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கி ஊர் திரும்பினர். இரவு 9.00 மணிக்கு மாளிகை புறத்தம்மன் கோயிலில் இருந்து சுவாமி 18-ம் படிக்கு முன்பு எழுந்தருளினார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்