மகரஜோதிக்கு பின் சபரிமலையில் என்னென்ன பூஜைகள் நடக்கும்

ஜனவரி 15,2022



 சபரிமலை: சபரிமலையில் மகரஜோதிக்கு பின் என்னென்ன பூஜைகள் நடக்கும், பக்தர்கள் எந்த நாள் வரை தரிசனம் நடத்த முடியும் என்ற விபரங்களை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலையில் நேற்று மகரஜோதி பெருவிழா நடந்தது. ஜன. 20- காலை 6:30 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பல்வேறு சடங்குகள் சபரிமலையில் நடக்கிறது.மகரஜோதி முடிந்த நேற்று முதல் ஜன. 17- வரை தினமும் இரவு 9:30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து சுவாமி 18-ம் படிக்கு முன்னர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.18 ல் சரங்குத்திக்கு எழுந்தருளுவார். மணிமண்டபத்தில் கோலமிடல்மாளிகைப்புறம் கோயில் பின்புறம் உள்ள மணி மண்டபத்தில் ஜன. 15 முதல் ஜன.19 வரை களம் எழுத்து என்ற கோலமிடும் நிகழ்ச்சி நடக்கும்.

ஐயப்பனின் மாறுபட்ட முகதோற்றம் நான்கு நாட்களும் வண்ண பொடிகளால் வரையப்படும். ஜன. 15 முதல் 19- வரை தினமும் படிபூஜை நடைபெறும். மாலையில் தீபாராதனைக்கு பின்னர் 7:00 மணிக்கு தொடங்கும் இந்த பூஜை இரவு 8:00 மணி வரை நடைபெறும். இதனால் இந்த நாட்களில் மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் 18-ம் படியேற முடியாது. இந்த நாட்களில் உதயாஸ்தமன பூஜையும் நடைபெறும். நெய்யபிஷேகம் நிறைவுகடந்த 60 நாட்களாக நடந்து வந்த நெய்யபிஷேகம் ஜன.18 காலை 10.00 மணிக்கு நிறைவு செய்யப்படும். அதை தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேவசம்போர்டு சார்பில் களபம் பூஜிக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால் ஜன. 18 காலை 10:00 மணிக்கு பின்னர் சன்னிதானம் வருபவர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது. ஜன.15 மாலை முதல் ஜன.18 இரவு வரை பக்தர்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம். ஜன.19 இரவு 10.00மணியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும். 10:30-க்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கும். நடை அடைப்பு ஜன.20 காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி சங்கர்வர்மா சன்னிதானம் முன்புறம் வருவார். அப்போது மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை அடைத்து அவருடன் 18-ம் படியின் கீழ்பகுதிக்கு வருவார். அங்கு சாவியையும், வருமானம் என சிறிது பணம் அடங்கிய முடிப்பையும் மன்னர் பிரதிநிதியிடம் கொடுப்பார். அதை பெற்றுக்கொண்ட பின்னர் சாவி மற்றும் பண முடிப்பை மேல்சாந்தியிடம் திரும்ப கொடுக்கும் மன்னர் பிரதிநிதி, வரும் காலங்களிலும் சபரிமலையில் பூஜைகளை முறையாக நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் விடைபெறுவார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்