சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை

ஜனவரி 19,2018



சபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு அடைந்தது; இன்று இரவு, மாளிகைபுறத்தில் குருதிபூஜை நடக்கிறது. நாளை காலை நடை அடைக்கப்படும். கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல- மற்றும் மகரவிளக்கு காலத்தில், 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம், நேற்று காலை நிறைவடைந்தது. அதன் பின், கோவில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு களபபூஜை நடத்தினார். பிரம்மகலசம் பூஜித்து, அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி எடுத்து, கோவிலை வலம் வந்தார். பின், அய்யப்பன் சிலையில் களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடந்தது. நேற்று இரவு சரங்குத்தி வரை சென்ற மாளிகைப்புறத்தம்மன் பவனி, பின் கோவிலுக்கு திரும்பியது.

இன்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோவிலில் கொடுத்து விட்டு, அபிஷேகம் செய்த நெய்யை பிரசாதமாக பெற்று செல்லலாம். இரவு 10:௦௦ மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோவிலில் குருதிபூஜை நடக்கிறது. அதன் பின், பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. நாளை காலை, நடை திறந்த பின், 6:30 மணிக்கு, பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.மண்டல மகரவிளக்கு காலத்தில், சபரிமலை வருமானம், 255 கோடி ரூபாயை தாண்டியது; இது, கடந்த ஆண்டை விட, 45 கோடி ரூபாய் அதிகம்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்