Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

பிறப்பும் இளமையும்!டிசம்பர் 27,2012

ஸ்ரீராமகிருஷ்ணர் 1836-ஆம் ஆண்டு அவதரித்தார். அவரது பிறப்பு மனித குலத்தின் ஆன்மீக வரலாற்றில் பெரும் விளைவுகளை உண்டாக்கியது. ஆன்மீக உணர்விலும் இறையுணர்விலும் தோய்ந்த பூமியிõன இந்தியாவில் அது ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக அமைந்தது. அவர் ஐம்பது ஆண்டு குறுகிய காலமே வாழ்ந்தார்.

ஆனால் அதற்குள் அவர் ஆன்மீகத்தின் மகோன்னதமான சிகரங்களைத் தொட்டு, அவற்றிற்குச் செயல் விளக்கமும் அருளினார். கல்விச் சாலை விவாதங்களாகவும், சமயக் கொள்கைகளாகவுமே இருந்த உண்மைகளை அவர் நேரடி அனுபவமாக, அன்றாட வாழ்வின் அனுபவமாக மாற்றி அமைத்தார். அவரது வாழ்க்கை ஓர் ஆன்மீகக் கனல். இறைவனை ஆர்வத்துடன் தேடுபவர்களுக்கெல்லாம் அவர் புதிய ஒளியையும் நம்பிக்கையையும் அளித்தார். தாம் மறையும் முன்னால், ஒளி மிகுந்த தமது ஆன்மீக வாழ்க்கையால் பல தீபங்களை ஏற்றி வைத்தார்.

துறவியரும் இல்லறத்தினருமாக அனேக தீபங்களை ஸ்ரீராமகிருஷ்ணர் ஏற்றி வைத்தார். அவர்களில் ஒருவரே சுவாமி ராமகிருஷ்ணானந்தர், அவரை சசி மகராஜ் என்று அன்போடு அழைத்தனர். அவர் ஒரு மகான். ஆன்மீக ஆற்றலின் சுரங்கம். ஆழ்ந்த சிந்தனையாளர், குருபக்திக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர். அன்பு மற்றும் இறையுணர்வின் திரண்ட உருவமாகிய ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை விரிவாகப் பரப்பிய ஒரு முன்னோடி.

1863 ஜூலை 13 இல் வங்காளத்தில் உள்ள இச்சாபூரில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பிறந்தார். அவரது இயற் பெயர் சசிபூஷண் சக்கரவர்த்தி.

தேவியை வழிபடும் ஒரு குடும்பத்தில் சசி பிறந்தார். அவர் ஈசுவர சக்கரவர்த்தியின் (1837-1902) மூத்த மகன். 24 பர்கானா மாவட்டத்திலுள்ள மஜில்பூர் அந்தக் குடும்பத்தின் பூர்வீகம்; குடும்பப் பெயர் பாபுலி, தங்கள் சொந்தக் கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்த பிறகு, அந்த வம்சத்தில் சிலர் தங்கள் குடும்ப பெயரைச் சக்கரவர்த்தி என்று மாற்றிக் கொண்டனர். ஈசுவர சந்திரர் ஒரு சிறந்த காளி பக்தர். பல்வேறு தந்திர சாஸ்திர முறைகளிலும் சாதனைகளிலும் அவர் பிரசித்தி பெற்றவர். அவர், வங்காளத்தில் மிகவும் பிரபலமான சுவாமி பூர்ணானந்த அவதூதரின் சீடர்.

பைக்பாரா ஜமீன்தாரான ராஜா இந்திர நாராயண சிங்கின் சபையில் ஈசுவர சந்திரர் பண்டிதராக இருந்தார். அந்த ராஜா ஈசுவர சந்திரரைத் தன் குருவாக மதித்தார்; குருவின் தந்திர வழிபாடுகளுக்காக எல்லா வசதிகளையும் கொண்ட ஓரிடத்தைத் தன் தோட்டத்தில் ஒதுக்கி வைத்தார். காளி வழிபாட்டிற்குரிய எல்லா சுபதினங்களிலும் ஈசுவர சந்திரர் நீண்ட நேரம் தேவியை வழிபடுவார். ஆன்மீக சாதனைகளுக்கு உகந்த இடங்களான ஆற்றங்கரை ஓரத்திலும், புனித மரங்களான வில்வமரம்ல, அரசமரம் ஆகியவற்றின் கீழும் அவர் இரவு முழுவதும் ஜபமும் தியானமும் செய்வது வழக்கம்.

காளி உபாசனையில் கைதேர்ந்தவரான அவருக்குச் சிறந்த மதிப்பு இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி சாரதானந்தரையும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையாகிய யோகின்மாவையும் தந்திர வழிபாட்டில் வழிகாட்டுதல் பெறுவதற்காக, அன்னை ஸ்ரீசாரதாதேவி இவரிடம் அனுப்பினார். வலுவான உடல், நீண்ட முடி, அலை அலையாகத் தவழும் தாடி, அகன்ற நெற்றி, அதன்மீது பூசிய சிவந்த சந்தனக் குழம்பு; இவ்வாறு பக்தி மனப்பாங்கிற்குப் பொருத்தமான ஒரு ரிஷியைப்போல் தோற்றம் அளித்தார் ஈசுவர சந்திரர் பேலூர் மடத்தில் நடைபெற்று பல பூஜைகளில் ஈசுவர சந்திரர் பூஜைக்கு உதவுபவராக (தந்த்ர தாரக்) பணி ஆற்றியுள்ளார்; அங்கு நடைபெற்ற முதல் துர்கா பூஜையிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

சசி மகராஜின் தாய் பாவ சுந்தரி தேவி (1846-1925) காளி தேவியின் தீவிரமான பக்தை. ஒருமுறை அவருடைய இரண்டாவது மகளும் கடைசி மகனும் கடுமையான நோயுற்றிருந்தனர். அவர்கள் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்டனர். உடனே அந்த அன்புத் தாய் தமது வலது கையை அன்னை காளிக்கு முற்றிலுமாக சமர்ப்பணம் செய்தார். நாளடைவில் அவருடைய இரண்டு குழந்தைகளும் மீண்டும் உடல்நலம் பெற்றனர். அதன்பிறகு இறுதிநாள் வரை அவர் தமது வலது கையைப் பயன்படுத்தவே இல்லை. இடது கையாலேயே எல்லா வேலைகளையும் செய்தார்.

பாவ சுந்தரி தேவி மிகவும் எளிமையானவர். பக்தி மிக்கவர், தன் மகன் சசியின் முன்னால்கூட அவர் தன் முகத்தைத் திரையால் மூடிக்கொள்வார். அவ்வளவு நானம் மிக்கவர்.

இத்தகைய பெற்றோரின் பிள்ளையாக, சசி தெய்வீக இயல்புகளை வளர்க்கும் சூழலில் வளர்ந்தார். இச்சாபூருக்கு மயால் இச்சாபூர் என்ற ஒரு பெயரும் உண்டு. அது ஒரு குக்கிராமம்; துவாரகேசுவர் ஆற்றின் கரையில் உள்ளது. மேற்கு வங்கத்தின் ஹூக்ளி ஜில்லாவில் கனகல் பகுதியில் அது அமைந்துள்ளது. ஆரவாரம் மிக்கக் கல்கத்தா நகரத்திலிருந்து அது 40 கி.மீ தூரம் பச்சைப்பசேலென்று செழித்த சுற்றுப்புறச் சூழலை உடையது இச்சாபூர் கிராமம்; பரந்து கிடக்கின்ற மரகதப் பச்சை வயல் வெளிகள்; பழத்தோட்டங்கள்; பூத்துக் குலுங்கும் செடிகள், மரங்கள்; கிராமப் புறத்தினருக்கே உரிய எளிய இயல்புகள்-இவை யாவும் இளம் சசியின் உள்ளார்ந்த ஆன்மீக இயல்புகளைப் பேணி வளர்த்தன.

ஆண்டு தோறும் துர்கா பூஜையின் போது அவர் தேவி பூஜை செய்வார். ஆசனத்தைவிட்டு நீங்காமல் இருபத்து நான்கு மணி நேரம்கூடத் தொடர்ந்து பூஜை செய்வதுண்டு.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)