Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில்..ஜனவரி 01,2013

கிராமப் பள்ளியில் சசிபூஷன் தன் படிப்பை முடித்தார். உயர்நிலை ஆங்கிலக் கல்விக்காகக் கல்கத்தா போனார். அங்கு தன் உறவினரான சரத்துடன் தங்கிப் படித்தார். சரத்தும், சசியும் சம வயதினர். சரத் பிற்காலத்தில் சுவாமி சாரதானந்தர் ஆனார்.

கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் சசி வெற்றி பெற்றார். அவர் திறமை மிக்க மாணவராக இருந்ததால், கல்வி உதவித்தொகை கிடைத்தது. ஆல்பர்ட் கல்லூரி முதல்நிலைக் கலைத்தேர்வில் தேர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பி. ஏ பட்டப் படிப்பிற்காக மெட்ரோபாலிடன் கல்லூரியில் (தற்போதைய வித்யாசாகர் கல்லூரி) சேர்ந்தார்; சம்ஸ்கிருதம், ஆங்கில இலக்கியம், கணிதம், தத்துவ இயல் ஆகியவை அவருடைய சிறப்புப் பாடங்கள்.

கல்லூரி நாட்களில் சசியும் சரத்தும் பிரபல சீர்த்திருத்த இயக்கமான பிரமம் சமாஜத்தில் உறுப்பினர் ஆயினர். அந்த சமாஜத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான கேசவ சந்திர சேனின் சொற்பொழிவுகளால் அவர்கள் பெரிதும் கவரப் பட்டனர். கேசவரின் பிள்ளைகளுக்குச் சசி சிறிது காலம் பாடம் சொல்லிக் கொடுக்கவும் செய்தார்.

கேசவரிடமிருந்து முதன்முதலாக ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி சசி கேள்விப்பட்டார். கேசவ சந்திர சேனை நாம் பெரிதும் மதிக்கிறோம். அவரே இந்தப் பரமஹம்சரைப் போற்றுகிறோரே! இந்தப் பரமஹம்சரிடம் வியக்கத்தக்க ஏதோ ஒன்று இருக்கவேண்டும் என்று சசியும் நண்பர்களும் பேசிக் கொண்டனர்.

சசியின் ஆன்மீக ஆர்வம் வளர்ந்தது. அவர் ஒரு குருவை ஆர்வத்துடன் தேடினார். 1883-அக்டோபரில் ஒருநாள் சசி, சரத் மற்றும் சில நண்பர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை தரிசிப்பதற்காக தட்சிணேசுவரம் சென்றனர். அவர்கள் சென்றபோது அவர் தமது அறையில் சிறிய கட்டிலில் அமர்ந்திருந்தார். அவர்களைக் கனிவோடு வரவேற்றார். தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமரச் செய்தார். பிறகு அவர்களது பெயரையும் இருப்பிடத்தையும் பற்றி கேட்டார். அவர்கள் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்ததும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

சசியையும் சரத்தையும் முதன்முதலாகப் பார்த்த உடனேயே, ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்கள் தம்மைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுகொண்டார். அவர்களுடைய துறவுணர்வை உணர்ந்த குருதேவர் கூறினார்; செங்கல், ஓடு இவற்றின்மீது பெயர், சின்னம் போன்ற வியாபார முத்திரையைப் பதித்து, காளவாயில் வைத்துச் சுட்டால் அந்த முத்திரை நிலையாகப் பதிந்துவிடும். அதுபோன்று உலக வாழ்க்கையை ஏற்பதற்கு முன்பு நீங்கள் ஆன்மீகம் என்னும் முத்திரையைப் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தளையில் சிக்க மாட்டீர்கள். ஆனால் இந்தக் காலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். படிப்பை முடிக்கும்போது அவர்கள் சில குழந்தைகளுக்குத் தந்தையாகி விடுகின்றனர். பின்னர் குடும்பத்தைப் பராமரிக்க வேலை தேடி இங்குமங்கும் அலைய வேண்டியுள்ளது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணவளிப்பதற்கான உத்தியோகத்தைப் பெறுவது எத்தனை சிரமமான ஒன்று!

அப்போது இளைஞர்களுள் ஒருவன். திருமணம் ஒரு தவறான செயலா, கடவுளின் விருப்பத்திற்கு மாறானதா? என்று கேட்டான். அதற்கு குருதேவர் அலமாரியில் இருந்த ஒரு புத்தகத்தைக் காட்டி அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் படிக்குமாறு சொன்னார். அது பைபிள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவன் திருமணம் செய்து கொள்ளலாம்; மனம் வெதும்பி வாழ்வதை விட அது மேல் என்ற கருத்தை ஏகநாதரும் செயின்ட் பாலும் அதில் வலியுறுத்தியிருந்தனர்.

அதன்பின்னர் குருதேவர் சசியிடம், நீ நம்புவது உருவக் கடவுளையா, இல்லை அருவக் கடவுளையா? என்று கேட்டார். அதற்கு சசி ஐயா, கடவுள் இருக்கிறார் என்பதையே இன்னும் என்னால் முழுமையாக நம்பமுடியவில்லை. இந்த நிலையில் உங்கள் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? என்று கூறினார். வெளிப்படையான இந்தப் பதில் குருதேவருக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. இது விதண்டாவாதமான பதில் அல்ல. இறைவனை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தால் எழுந்தது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. இளைஞர்கள் அவரிடம் விடைபெறும் வேளை ஆயிற்று. குருதேவர் சசியிடம் மறுபடியும் வா; நீ மட்டும் தனியாக வா என்று சொன்னார்.

சசியும் சரத்தும் தமக்கு மிகவும் அந்தரங்கமானவர்கள் என்பதை முதல் நாளிலேயே ஸ்ரீராமகிருஷ்ணர் அறிந்துகொண்டார். 1885 டிசம்பர் 23 அன்று குருதேவர் ம-விடம் சொன்னார். பக்தர்களுக்காக இறைவன் மனித உடலில் அவதரிக்கிறார். அப்போது பக்தர்கள் பலரும் பூமிக்கு உடன் வருகின்றனர். சிலர் உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள், நெருக்கமானவர்கள்; சிலர் வெளிவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் தேவைகளை அளிப்பவர்கள்.... பக்தர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே. அவர்களுடைய இயல்பை தேவி எனக்குக் காட்டி அருள்கிறாள். சசியும் சரத்தும் ஏசுவின் சீடர் கூட்டத்தில் இருந்ததை நான் ஒரு தெய்வீகக் காட்சியில் கண்டேன்.

சசியும் சரத்தும் குருதேவரை தரிசிப்பதற்காக அடிக்கடி வரத் தொடங்கினர். அவருடைய போதனைகளின் படி ஆன்மீக சாதனைகளைச் செய்து வந்தனர்.

1885-இல் ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தொண்டையில் வலி ஏற்பட்டது. பின்னால் அது புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சை செய்வதற்காக அவரைக் கல்கத்தாவின் சியாம்புகூரில் ஒரு வீட்டிற்குக் கொண்டுவந்தனர். ஒரு மாதம் ஆயிற்று. எந்தப் பலனும் இல்லை. அது மிகவும் நெருக்கமான பகுதி. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரை நகரத்திற்கு வெளியில் இருந்த தூய்மையான, அமைதியான காசிப்பூர்த் தோட்ட வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.

அன்னை சாரதாதேவியும் இளைஞர்களும் குருதேவரின் சேவையை ஏற்றுக் கொண்டனர். இல்லற பக்தர்கள் அதற்கான பண உதவியைச் செய்தனர். சசி சேவையின் உருவமாகவே திகழ்ந்தார். குருவை வழிபடுவதே மிகவும் உயர்ந்த சாதனை என்று அவர் நம்பினார். வேறு எந்த ஆன்மீக சாதனையையும் அவர் செய்யவில்லை. எந்தப் புண்ணியத் தலத்திற்கும் அவர் யாத்திரை போகவில்லை. தன் சொந்த வசதிகளையும் மறந்து அவர் குருதேவருக்கு எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தார். தாஸ்ய பக்திக்கு (ஒரு சேவகனின் மனப்பான்மையோடு செய்யும் பக்தி) அவரது வாழ்க்கை ஒளிவீசும் ஓர் உதாரணம். சில வேளைகளில் சசி குருதேவருக்கு மணிக்கணக்கில் நிறுத்தாமலேயே விசிறிக் கொண்டிருப்பார். நீ போய் சாப்பிடு அப்பா, நான் நன்றாகவே இருக்கிறேன் என்று குருதேவர் சொல்ல வேண்டியிருக்கும்.

குருதேவரின் இல்லறச் சீடரான ராமச்சந்திர தத்தர் சசியின் சேவை பற்றி தமது நூலில் எழுதுகிறார். சகோதரா சசி, நீ உண்மையிலேயே பாக்கியவான்! சேவை ரகசியத்தை நீ முற்றிலுமாக உணர்ந்திருந்தாய். அதனால்தான் ஸ்ரீபகவானின் விசேஷ அருளுக்குப் பாத்திரமானாய். அவரது சேவகர் குழுவில் சிகரமாகத் திகழ்கிறாய் நீ. நீ அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பு மகன். அன்புச் சேவகன். சேவையில் உனக்கு இணை யாரும் இல்லை.

ஸ்ரீராமகிருஷ்ணரும் சசியிடம் எல்லையில்லா அன்பு கொண்டிருந்தார். சசியின் ஆன்மீக வாழ்க்கையை உருவாக்குவதற்காக அவர் பெரும் அக்கறை எடுத்துக்கொண்டார்.

1886 ஜனவரியில் ஒருநாள், மூத்த கோபால் என்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் பன்னிரண்டு காவி உடைகளையும் ருத்திராட்ச மாலைகளையும் கொண்டு வந்து; அவற்றைச் சிறந்த துறவிகளுக்கு அளிக்கப் போவதான தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர். இதோ இந்த இளைஞர்களுக்கு இவற்றை அளிக்கலாம். இவர்களைவிடச் சிறந்த துறவிகளை நீ வேறு எங்கும் காண முடியாது என்று கூறினார். உடனே மூத்த கோபால் அவற்றை குருதேவரிடம் வழங்கினார். குருதேவர் தமது இளம் சீடர்களில் பன்னிருவருக்கு அவற்றை அளித்தார். ஒன்றை சசியும் பெற்றார்.

1886 ஆகஸ்ட் 16-இல் ஸ்ரீராமகிருஷ்ணர் மறைந்தார். அவர் உடலை உகுத்துவிட்டார் என்ற செய்தியை சசியால் நம்ப முடியவில்லை ஈமத்தீயின் அருகில் அமர்ந்திருந்த அவரது கண்கள் நீரைப் பொழிந்தன. கையில் ஒரு பனை ஓலை விசிறியை வைத்துக்கொண்டு ஸ்ரீராமகிருஷ்ணரின் சிதையில் விசிறிக் கொண்டே இருந்தார். இறுதியில் குருதேவரின் அஸ்தியை ஒரு கலசத்தில் சேமித்து, அந்தக் கலசத்தைத் தன் தலைமீது தாங்கியபடி தோட்ட வீட்டிற்குக் கொண்டுவந்து அதனை அருதேவரின் படுக்கைமீது வைத்தார்.

ராமச்சந்திர தத்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் முக்கிய இல்லறச் சீடர்களுள் ஒருவர், குருதேவரின் அஸ்தியைத் தமது தோட்ட வீட்டில் நிறுவி, ஒரு கோயில்கட்ட அவர் ஏற்பாடுகள் செய்தார். சசியும் நரேனும் (பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர்) மற்ற சீடர்களும் கலந்து பேசினர். கங்கைக் கரையில் அந்த அஸ்தியை நிறுவி, குருதேவருக்கென்று கோயில் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் அப்போது அவர்களிடம் சல்லிக் காசு கிடையாது. எனவே ராமச்சந்திர தத்தரும் மற்ற இல்லறச் சீடர்களும் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் சசியும் நிரஞ்ஜனும் பிறர் அறியாமல் அஸ்தியின் பெரும்பகுதியை வேறொரு கலசத்திற்கு மாற்றி, அதை பலராம் போஸின் வீட்டில் ரகசியமாக வைத்தனர். எஞ்சிய பாகத்தை ராமச்சந்திர தத்தருக்குக் கொடுத்தனர்.

ராம் பாபு அஸ்தியைக் காங்குர்காச்சியில் தமது தோட்ட வீட்டில் நிறுவி. அங்கே கோயில் ஒன்றை எழுப்பினார். அஸ்தி மண்ணால் மூடப்பட்டதைச் சசியால் தாங்க முடியவில்லை. ஓ, குருதேவருக்கு வலிக்கிறதே! என்று கூறி அழுதார். சசியின் உணர்ச்சிப்பெருக்கைக் கண்ட பக்தர்களும் கலங்கினர்.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)