Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

குருதேவரின் மறைவிற்குப் பிறகு..ஜனவரி 01,2013

குருதேவர் மறைந்த பிறகு இளைஞர்கள் தங்க இடம் இல்லாமல் போயிற்று. அவர்களில் ஓரிருவர் தீர்த்த யாத்திரை கிளம்பினர். சிலர் சொந்த வீட்டிற்குச் சென்றனர். சசியும் அரைகுறை மனத்தோடு வீடு திரும்பினார். நரேனும் மற்ற சீடர்களும் வராக நகரம் என்ற இடத்தில் பாழடைந்த ஒரு கட்டிடத்தில் சேர்ந்து வாழத் தொடங்கினர். கீழே செடிகொடிகளும் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் நிறைந்திருந்தன. பேய்கள் வாழும் வீடென்று அந்தப் பக்கமே யாரும் வருவதில்லை. இத்தகைய இடத்தில்தான் இன்று உலகளாவி நிற்கும் ராமகிருஷ்ண மடம் ஆரம்பித்தது.

விரைவில் சசியும் அந்த மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் முதலில் செய்தது மாடியில் உள்ள ஓர் அறையைப் பூஜையறையாக அமைத்ததுதான். பலராமின் வீட்டிலிருந்து குருதேவரின் அஸ்தி கொண்டு வரப்பட்டது. அஸ்திக் கலசமும், குருதேவரின் படமும் பீடத்தில் வைக்கப்பட்டன. குருதேவர் காசிப்பூரில் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டன.

1886 முதல் 1897 வரை முதலில் வராக நகர் மடத்திலும் பின்னர் ஆலம்பஜார் மடத்திலுமாக நீண்ட பதினோராண்டுக் காலம் குருதேவரின் நினைவுச்சின்னங்களை சசி போற்றிப் பாதுகாத்தார்; பூஜைகள் செய்தார், அவர் புனிதத் தலங்கள் எதற்கும் யாத்திரை போகவில்லை. இரவு நேரங்களில் மடத்தைவிட்டு வெளியேயும் செல்லவில்லை. உயிர் வாழும் மனிதருக்குப் பணி விடைகள் செய்வதைப் போல், குருதேவருக்குச் சேவைகள் செய்து பூஜையும் செய்தார் சசி. அவரது தினசரி வாழ்க்கை முறை கீழ்க் காணுமாறு அமைந்திருந்தது.

அதிகாலை 4 மணிக்கு எழுவார். நீராடிய பிறகு பூஜை யறைக்குள் புகுவார்; குருதேவரைத் துயில் எழுப்புவார். பல் துலக்குவதற்காக ஒரு குச்சியும், நீரும் படைப்பார். காலை உணவாகத் தேங்காய் லட்டும், நீரும் படைப்பார். புகை பிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். பொழுதேறியதும் பூப் பறிப்பார். கோயிலைப் பெருக்கித் தூய்மைப் படுத்துவார். பூஜைக்குரிய பாத்திரங்களைத் தேய்ப்பார். மற்ற ஏற்பாடுகளைச் செய்வார். பின்னர் கடைத்தெருவிற்குச் சென்று மளிகைச் சாமான்கள் வாங்குவார். காய்கறிகளை நறுக்கிச் சமையற்காரருக்கு உதவி செய்வார். அதன்பிறகு கங்கையில் குளிக்கப் போவார். திரும்பும்போது பூஜைக்காகத் தூய கங்கை நீரைக் கொண்டு வருவார். அதன்பிறகு பூஜை செய்வார். சமைத்த உணவை குருதேவருக்கு நிவேதனம் செய்வார். மாலைவேளையில் ஆரதி செய்வார். அதை நினைவுகூர்ந்து சுவாமி விரஜானந்தர் கூறுவார்:

ஓ! சசி மகராஜ் செய்கின்ற ஆரதியின் அழகை என்னென்று சொல்வது! தேவர்களுக்கும் கிடைக்காத அனுபவம் அது. நறுமணப்புகை எங்கும் பரவி நிற்க. பாடலும் பல்வேறு இசைக் கருவிகளும் கலந்தொலிக்க தெய்வீகப் பேருணர் வில் மூழ்கியவராக, ஜெய் குருதேவ், ஜெய் குருதேவ் என்று கூறியபடி, பாடலின் தாளத்திற்கேற்ப பூஜையறையின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்குச் சாய்ந்தாடியவராக ஆரதி செய்வார் அவர். முகத்தில் ஆன்மீகப் பேரொளி துலங்க அக்னி தேவன் போல் ஜொலிப்பார்.... பக்கத்து அறையில் அமர்ந்துள்ள பக்தர்கள் ஜெய்குருதேவர் ஜெய் குருதேவ் என்று இசைந்து பாடுவார்கள். அவர்களும் சிவவேளைகளில் ஆடுவதுண்டு.

மாலை ஆரதி வேளையில் ஜெய் பகவான் ஜெய் பகவான் என்று உரத்த குரலில் கூறியபடி கால்களை ஆவேசமாகத் தூக்கி வைத்த படி சசி ஆடுவதைக் கண்டால் எங்கே பூமியே பிளந்துவிடுமோ என்று தோன்றும் என்று தமது நினைவுக்குறிப்புகளில் வைகுண்டநாத் எழுதுகிறார்.

ஆரதி நிறைவுற்ற பிறகு அனைவரும் தரையில் வீழ்ந்து ஸ்ரீகுருதேவரைப் பணிவார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து.
அஜ்ஞான திமிராந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா
சக்ஷúருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீகுரவே நம (அறியாமை நோயால் ஒளியிழந்த என் கண்களை ஞான மையிட்டுத் திறந்து பார்வை அளித்த ஸ்ரீகுருவை உம்மை வணங்குகிறேன்.) என்ற குருகீதைப் பாடலைப் பாடுவார்கள்.

நிரஞ்ஜனம் நித்யம் அனந்தரூபம் பக்தானுகம்பாத் த்ருதவிக்ரஹம்
ஈசாவதாரம் பரமேசமீட்யம் தம் ராமக்ருஷ்ணம் சிரஸா நமாம (தூயவரும் அழிவற்றவரும் எல்லயற்றவரும் பக்தர்களிடம் கொண்ட கருணையால் மனித உருக் கொண்டவரும் இறைவனின் அவதாரமானவரும் எல்லோராலும் வழிபடத் தக்க பரமேசுவரனும் ஆகிய ஸ்ரீராமகிருஷ்ணரைத் தலையால் பணிந்து வணங்குவோம். ) என்ற சுவாமி அபேதானந்தர் எழுதிய ஸ்தோத்திரவரிகள் பாடப்படும். இறுதியாக ஜெய் ஸ்ரீகுருமகராஜ் ஜீ கீ ஜெய் என்ற கோஷத்துடன் ஆரதி நிகழ்ச்சி நிறைவுபெறும்.

இந்த நாட்களில் இளைஞர்களின் துறவு வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி ஆனட்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது. அது பாபுராமின் (பின்னாளில் சுவாமி பிரேமானந்தர்) சொந்த ஊர். அவரது தாய் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தை. அவர் இந்த இளைஞர்களை ஒருமுறை விருந்திற்கு அழைத்தார். 1886 டிசம்பரில் சசியும் இன்னும் சில சீடர்களும் அங்கே சென்றனர். இரவில் அங்கே துனி என்னும் புனிதத் தீ வளர்த்து, அதைச் சுற்றி இரவு முழுதும் கண் விழித்து அமர்ந்திருந்தனர். நரேந்திரர் துறவின் பெருமையைப் பற்றிப் பேசி அவர்களுக்கு ஊக்க மூட்டினார். உலக வாழ்க்கையைத் துறப்பது என்று அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஒரு மாதத்திற்கு பிறகு அவர்கள் வராக நகர் மடத்தில் விரஜா ஹோமம் செய்து, சம்பிரதாயப் படி சன்னியாசம் ஏற்றுக்கொண்டனர். குருதேவர்மீது சசிக்கு இருந்த ஈடில்லாத பக்தியின் காரணமாக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்னும் பெயரை அவருக்குச் சூட்டினார் நரேந்திரர்; இருப்பினும் பொதுவாக அனைவராலும் சசி மகாராஜ் என்றே அழைக்கப்பட்டார் அவர்.

சசி மகாராஜ் ஸ்ரீராமகிருஷ்ணரின் பூஜைகளையும் சேவைகளையும் கவனமாகச் செய்து வந்தார். வராக நகர் மடத்துத் துறவியரின் வாழ்க்கையில் ஒரு மையத் தூணாகவும் விளங்கினார். மற்ற சகோதரச் சீடர்கள் தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சசி மகராஜ் குரு மகராஜின் சேவையுடன். அவரது துறவிப் பக்தியையும் சேவையையும் சுவாமி விவேகானந்தர் இவ்வாறு பாராட்டியுள்ளார். சசியே மடத்தின் முக்கியத் தூணாக விளங்கினான் அவன் மட்டும் இல்லாமல் இருந்தால் மடத்தை நடத்தியிருக்க முடியாது. மற்றவர்கள் உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் பிரார்த்தனையிலும் தியானத்திலும் மூழ்கியிருப்பார்கள். சசி அவர்களுக்காக உணவை வைத்துக்கொண்டு காத்திருப்பான்; தேவை ஏற்பட்டால் அவர்களைத் தியானத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்தும் உணவு ஊட்டுவான்.

இளம் துறவியர் பலருக்கும் தீர்த்த யாத்திரை செல்லும் ஆர்வம் இருந்தது. அவர்கள் அவ்வப்போது அதற்காக மடத்தை விட்டுச் சென்றனர். அவ்வாறு ஒருமுறை கூட வெளியே அடி எடுத்து வைக்காதவர் சசி மகராஜ் மட்டுமே!

1892-பிப்ரவரியில் ஆலம்பஜாருக்கு மடம் மாற்றப்பட்டது. இங்கேயும் சசி மகராஜ் ஸ்ரீராமகிருஷ்ண வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தார். சசி மகராஜின் செயலாக்கத் திறமைகளில் சுவாமி விவேகானந்தருக்கு அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. சுவாமிஜியின் உண்மையான, நம்பிக்கைக்குரிய சகோதரச் சீடராக சசி மகராஜ் விளங்கினார்.

சுவாமி விவேகானந்தர் சசி மகராஜிற்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுத்த சில பகுதிகள் பின்வருமாறு சசிமகராஜ் பின்பற்ற வேண்டிய வழி முறையை சுவாமிஜி மிகவும் துல்லியமாக இதில் குறிப்பிடுகிறார்.

ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய
அமெரிக்கா
1895

அன்பார்ந்த சசி,

.............இப்போது உனக்குச் சில அறிவுரைகள். இது உனக்காகவே எழுதப்படுகிறது. தினமும் இதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ப வேலை செய்.

..............நான் இந்த அறிவுரைகள் சிலவற்றை உனக்குக் கூறுவதன் காரணம் இதுதான்; இயக்கம் அமைத்து வேலை செய்கின்ற திறமை உன்னிடம் உள்ளது. இதை குருதேவர் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் அந்தச் சக்தி இன்னும் கனியவில்லை. அவரது ஆசீர்வாத பலத்தால் அது விரைவிலேயே முழுமைபெறும். நீ எங்கேயும் போகாமல் ஒரே இடத்தில் இருப்பதே இதற்கு ஓர் அத்தாட்சி, ஆனால் அதில் ஆழம், விரிவு இரண்டும் வேண்டும்.

1. உலகில் மூவகையான துக்கங்கள் உள்ளன. அவை இயற்கையானவையல்ல. ஆகவே நிவர்த்திக்கப்படக் கூடியவை. அது எல்லா சாஸ்திரங்களின் முடிவாகும்.

2. இந்த ஆதி பவுதீக துக்கத்தின் (பிறரால் வருகின்ற துன்பம்) காரணம் ஜாதி தான்; அதாவது பிறவியை அல்லது குணத்தை அல்லது பணத்தை வைத்துப் பாகுபடுத்தப் படுகின்ற எல்லா விதமான பிரிவுகளுமே இந்த துக்கத்திற்குக் காரணம் என்று புத்தாவதாரத்தில் எம்பெருமான் கூறினார்....

3. எல்லாவிதமான துக்கத்திற்கும் காரணம் அறியாமை என்று கிருஷ்ணாவதாரத்தில் இறைவன் கூறினார். பயன் கருதாப் பணியால் மனத் தூய்மை ஏற்படுகிறது. ஆனால் கிம் கர்ம கிமகர்மேதி- செயல் எது, செயல் அல்லாதது எது என்பதில் அறிஞர்களும் திகைத்து நிற்கிறார்கள்.

4. எந்தச் செயலின்மூலம் ஆத்மபாவனை மலருமோ அது கர்மம், எதனால் ஆன்மா அல்லாத பாவனை வருமோ அது அகர்மம்.

5. ஆகவே கர்மம், அகர்மம் என்பவை நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபடும். நமது பயிற்சியும் அதற்கேற்ப அமைய வேண்டும்.

6. யாகம் முதலிய கர்மங்கள் பண்டைக் காலத்திற்குப் பொருத்தமாக இருந்தன. இக்காலத்திற்கு அவை பொருந்தாது. ஜாதி போன்ற விஷயங்களும் அப்படியே.

7. ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தநாள் முதல் சத்திய யுகம் தோன்றிவிட்டது.

8. ஸ்ரீராமகிருஷ்ண அவதாரத்தில், அறிவு வாளின்மூலம் நாத்திகக் கருத்துக்கள் அனைத்தும் ஒழிக்கப்படும்; பக்தி, பிரேமை ஆகியவற்றின்மூலம் உலகம் முழுவதும் ஒன்றுபடும்....

9. அன்றும் சரி, இன்றும், மதிப்பிரிவுகளை ஏற்படுத்தியவர்கள் தவறாக எதையும் செய்துவிடவில்லை....

10. ஆதலால்தான் ஒவ்வொருவரையும், அவர்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது யாருடைய தனிப்போக்கையும் குலைக்காமல் அவர்களை இன்னும் மேலான பாவனைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். சமுதாய நிலைகளிலும் அப்படியே; இப்போது உள்ளவை சிறந்தவைதான், அவை இன்னும் சிறந்தவையாக, மிகச் சிறந்தவையாக ஆக வேண்டும்.

11. பெண்குலம் சிறக்காமல் உலகத்திற்கு நல்ல காலம் இல்லை. ஒரே இறக்கையுடன் பறவை பறக்க முடியாது.

12. அதனால்தான் ஸ்ரீராமகிருஷ்ணாவதாரத்தில் குருவாக ஒரு பெண் ஏற்றுக்கொள்ளப் பட்டார்.....

13. அதனால்தான் பெண்களுக்கான மடம் ஒன்றை நிறுவ நான் முதன்முதலாக முயற்சி செய்கிறேன்....

14. வெறும் பித்தலாட்டத்தின்மூலம் எந்தப் பெரிய செயலையும் சாதிக்க முடியாது. அன்பு, சத்தியத்தில் பற்று, மகத்தான வீரம்-இவற்றின் உதவியாலேயே அரிய செயல்கள் சாதிக்கப்படுகின்றன....

15. யாருடனும் விவாதத்திற்கு அவசியமே இல்லை....

கம்பீரமாக இரு. கம்பீரத்துடன், குழந்தையின் களங்கமற்ற எளிமையும் கலந்திருக்க வேண்டும். எல்லோருடனும் கலந்து பழகு. அகங்காரத்தை விட்டுவிடு கொள்கைவெளியைத் தவிர்த்துவிடு. வீண் தாக்கம் பெரும் பாவம்.........

எதற்கும் பயம் வேண்டாம். இறைவனின் திருக்கரங்கள் நம் தலைமீது இருக்கும்வரை, யார் நம்மை அமுக்கிவிட முடியும்? மூச்சு நின்றவிடுமோ என்ற தருணத்திலும் பயம் வேண்டாம். சிங்கத்தின் வீரத்துடன், அதேவேளையில் மலரின் மென்மையுடனும் வேலை செய். இந்த ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தநாள் விழா வெகு தடபுடலாகக் கொண்டாடப்பட வேண்டும். சாப்பாடு மிகச் சாதாரணமாக இருக்கட்டும். உட்கார்ந்து சாப்பிடுகின்ற மகாப்பிரசாதம் எதுவும் வேண்டாம், கையில் கொடுத்தால் போதும், பரமஹம்ச தேவரின் வாழ்க்கை வரலாறு படிக்கப்பட வேண்டும். வேத வேதாந்த நூல்களை ஓர் இடத்தில் சேர்த்து வைத்து அவற்றிற்கு ஆரதி செய். பழைய முறையில் அழைப்பிதழ் அனுப்புவதை நிறுத்திவிடு... என் பெயரில் இருந்தால் மக்கள் பணம் தருவார்கள் என்று தோன்றுமானால் என் பெயரைப் போடு, அதாவது அச்சிடு, இல்லாவிட்டால் சாதாரணமாக, ராமகிருஷ்ண சேவர்களான துறவிகள் என்பதுபோல் ஏதாவது இருக்கட்டும் . ஒரு பக்கத்தில் ஆங்கில மொழியிலும் அச்சிட வேண்டும் பிரபு ராமகிருஷ்ணர் என்று சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. அதை விட்டுவிடுங்கள். ஆங்கிலத்திலேயே பகவான் என்று எழுதுங்கள். பிறகு ஆங்கிலத்தில் இரண்டொரு வரிகள் சேர்க்க வேண்டும். ஏராளமான பொருளுதவி வந்து சேருமானால் அதில் ஒரு பகுதியை மட்டுமே செலவு செய்து எஞ்சிய பகுதியை ஒரு நிதியாகச் சேமித்து வைக்க வேண்டும்.......

நரேந்திரன்

சசி மகராஜ் சுற்றறிந்தவர்; பக்தி மிகுந்தவர். மதிய உணவுக்குப் பிறகு ஓய்வு நேரத்தில் ஆங்கில இலக்கியக் கதைகளைப் படிப்பார். மார்க் ட்வெயின் எழுதிய வீட்டிலும் எளியவர்கள் வெளியிலும் எளியவர்கள் (தி இன்னோசன்ட்ஸ் அட் ஹோம் அன்ட் தி இன்னோசன்ட்ஸ் அபிராட்) என்ற கதையை நாடகப் பாணியில் உரக்கப் படிப்பார். படிக்கும் போதே கலகலவெனச் சிரித்து மகிழ்வார். அவரோடு சேர்ந்து மற்றவர்களும் சிரிப்பார்கள்.

கணக்குப் போடுவது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு கற்பலகையிலோ காகிதத்திலோ கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார். பாகவதத்தில் உள்ள ரிஷபதேவர் கதையை அவர் அடிக்கடி படிப்பார். ரிஷபதேவரின் நிலை ஒரு பரமஹம்சரின் உபதேசங்களை வங்கமொழியிலிருந்து சமஸ்கிருத சுலோகங்களாக அவர் மொழிபெயர்த்தார்; வித்யோதயா என்னும் சம்ஸ்கிருதப் பத்திரிகையில் அவற்றைத் தொடராகப் பிரசுரிக்க ஏற்பாடு செய்தார். சசி மகராஜுக்குப் பல துறைகளில் ஆர்வம் இருந்தது; ஒரு கணம்கூட அவர் சோம்பலாக இருந்ததில்லை.

ஸ்ரீகுருதேவரின் பெருவாழ்டு வெளியுலககிற்கு மெள்ளமெள்ளத் தெரியத் தொடங்கியது. ஈடிணையற்ற அவரது வாழ்வையும் உயர் லட்சியங்களையும் கண்ட பல இளைஞர்கள் மடத்தை நாடி வரத் தொடங்கினார்.

முதலாவதாக 1891-ஆம் ஆண்டில் மடத்திற்கு வந்தவர் காளிகிருஷ்ணர் (பின்னாளில் சுவாமி விரஜானந்தர்) எப். ஏ. பரீட்சையில் கணிதத்தில் தோற்கும் நிலையில் அவர் இருப்பதை அறிந்த சுவாமிகள், கோடை விடுமுறையின் போது நீ மடத்தில் தங்கு. நான் உனக்குக் கணிதம் சொல்லித் தருகிறேன். நீ எளிதில் வெள்ளிபெறலாம் என்று யோசனை கூறினார். காளிகிருஷ்ணர் இந்த யோசனையை ஏற்று, தந்தையின் அனுமதியுடன் புத்தகமும் கையுமாக மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் வந்தது சசி மகாராஜுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் மடத்துப் பணியைச் செய்வதில் மகிழ்ச்சி கண்டார் காளிகிருஷ்ணர்; கணிதத்தை மறந்தார். காளிகிருஷ்ணரின் ஆன்மீக ஈடுபாட்டைக் கண்டு மகிழ்ந்த சசி மகராஜின் மனத்திலும் கணிதத்தின் நினைவு எழவேயில்லை. விடுமுறை கழிந்தது. மூலையில் கிடந்த கணித புத்தகங்களை அங்கேயே கிடந்தன. சில நாட்களுக்குப் பின்னர் காளி கிருஷ்ணர் கணிதத்தை மட்டுமல்ல, குடும்பத்தையே துறந்துவிட்டு வராக நகர் மடத்தில் சேர்ந்துவிட்டார். இவ்வாறு படிப்படியாக பலர் மடத்தில் சேர்ந்தனர்.

1897-இல் சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளிலிருந்து இந்தியா திரும்பினார். சென்னையில் ஒரு நிரந்தர மையம் தொடங்க வேண்டும் என்று அங்குள்ள பக்தர்கள் சுவாமிஜியிடம் வேண்டினர். அவர்களிடம் சுவாமிஜி தென்னாட்டில் உள்ள உங்களுடைய தலைசிறந்த வைதீகர்களைவிடச் சிறந்த வைதீகரான, அதே வேளையில் பக்தியிலும் இறைவழிபாட்டிலும் தியானத்திலும் ஈடற்றவராகத் திகழும் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறியிருந்தார். சுவாமிஜி தமது கருத்தில் கொண்டிருந்தது சசி மகராஜையே

ஒருநாள் சுவாமிஜி சசி மகராஜை அழைத்து. சசி, நீ என்னிடம் வைத்துள்ள அன்பு உண்மைதானா என்பதை அறிய விரும்புகிறேன். சித்பூர் சாலை ஓரத்திற்குச் செல். அங்குள்ள முஸ்லீம் கடையிலிருந்து ஆங்கிலேய முறையில் தயாரிக்கப்பட்ட ரொட்டி ஒன்று எனக்காக வாங்கி வர வேண்டும். செய்வாயா? என்று கேட்டார். அந்த நாளின் வைதீக இந்து இந்தப் பொருளைக் கையால் கூட தொட மாட்டான். ஆனால் சசி மகராஜ் ஒரு கணம்கூட தயங்காமல் சுவாமிஜி கூறியதை நிறைவேற்றினார்.

1897 மார்ச்சில் ஒருநாள் சுவாமிஜி சசி மகராஜை அழைத்து என் சகோதரச் சீடருள் ஒருவரைச் சென்னைக்கு அனுப்பிவைப்பதாகச் சென்னை நண்பர்களுக்கு வாக்குக் கொடுத்துள்ளேன். நீ சென்னைக்குச் சென்று அங்கு குருதேவர் பெயரால் மடமொன்று ஏற்படுத்தி, ஸ்ரீகுருதேவரின் செய்தியைப் பரப்புகின்ற பணிகளைத் தொடங்க வேண்டும் என்று கூறினார். சுவாமிஜியின் அருளாணையை ஸ்ரீகுருதேவரின் திருவுளமாகக் கருதி, சசி மகராஜ் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார் விளக்கமெதுவும் கேட்கவில்லை, தயக்கமும் காட்டவில்லை.

சசி மகராஜ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. சாக்குபோக்கு எதுவும் சொல்லவில்லை பதினொன்று ஆண்டுகள் தன் குருதேவரின் அஸ்திக் கலசத்தை விழிப்போடு காத்ததையும் விட்டுவிட்டு, சுவாமிஜியின் உத்தரவை அமைதியாக ஏற்றுக்கொண்டார். மார்ச் மாதத்திலேயே சுவாமிஜியின் சீடரான சுவாமி சதானந்தருடன் கப்பலில் சென்னைக்குப் புறப்பட்டார் ஏப்ரலில் சென்னை வந்து சேர்ந்தார்.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)