Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 5ஜனவரி 03,2013

பள்ளியில் மட்டுமல்ல... வெளியில் பழகும் தன் நண்பர்களுக்காகவும்உயிரையே கூட கொடுப்பார் விவேகானந்தர்.அவருக்கு அப்போது வயது 11. ஒருமுறை கங்கையை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப்பார்க்க சென்றனர் நரேனும் அவனது தோழர்களும். கங்கையின் அக்கரைக்கு படகில் போய்விட்டு அதே படகில் திரும்புவதற்காக ஏறினர். அந்த நேரம் பார்த்து உடன் வந்தவர்களில் ஒருவனுக்கு திடீர் மயக்கம்...என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் அவனைத்தூக்கிப் படகில் போட்டனர்.படகுக்காரன் பயந்துவிட்டான். தம்பிகளா! போகிற வழியில் இந்தப் பையனுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, என் படகில் யாருமே ஏறமாட்டாங்க! நீங்க எல்லாரும் இறங்கிடுங்க, என்றான்.எல்லாரும் அவனைக்கெஞ்சினர். நரேந்திரன் மிக பவ்யமாக அவனிடம் பேசி, இரண்டு மடங்கு கட்டணம் தருவதாகச் சொல்லி, ஒரு வழியாக படகில் ஏற்றியாயிற்று. கரை அருகே நெருங்கவும் படகுக்காரன் கூலியைக் கேட்டான். இவர்கள் பேசிய கூலியைக் கொடுத்தனர். அவன் தகராறு செய்தான். இன்னும் அதிகம் வேண்டும். இல்லாவிட்டால் கரைக்கு போகமாட்டேன்.

இந்த சுகமில்லாதவனையும் தூக்கிக் கொண்டு நீந்தி கரைக்கு போங்கடா, என்றான். விவேகானந்தர் பிற்காலத்தில் குமரிக்கடலில் குதித்து நீந்தப் போகிறவர் ஆயிற்றே! விடுவாரா என்ன! கங்கையில் குதித்து விட்டார். நீச்சலடித்து கரைக்கு வந்தார். அங்கே இரண்டு ஆங்கில சிப்பாய்கள் உலவிக் கொண்டிருந் தனர். அவர்களிடம் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசி, படகுக்காரன் தகராறு செய்வதை விளக்கினார். புரிந்துகொண்ட அவர்கள் படகுக் காரனை சைகை காட்டி கரைக்கு அழைத்தனர். பையன்களை இறக்கிவிடும்படி கட்டளை யிட்டனர். படகுக்காரன் அலறிவிட்டான். உடனடியாக வந்து எல்லாரையும் இறக்கிவிட்டான். இப்படி சிறுவயதிலேயே நினைத்ததை சாதிக்கும் குணம் விவேகானந் தரிடம் ஏற்பட்டது. இன்னொரு முறை, அவரது நண்பர்கள் கல்கத்தா துறைமுகத்திற்கு வந்திருந்த ஆங்கிலேய போர்க்கப்பலை சுற்றிப்பார்க வேண்டுமென்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர்.

கப்பலைப் பார்க்க வேண்டுமென்றால் துரையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரைப் பார்ப்பது குதிரைக் கொம்பு.அதிலும் ஒரு சிறுவனை யாராவது அனுமதிப்பார்களா? நம் சின்ன நரேந்திரன் கிளம்பி விட்டார். துரையின் அலுவலகத்துக்கு சென்றார். வாசலில் நின்ற காவலன் அவரைத் தடுத்து விட்டான்.டேய்! உள்ளே துரை இருக்கிறார். இங்கே என்னடா உனக்கு வேலை? என்றான்.நானும் என் நண்பர்களும் கப்பலைப் பார்க்க வேண்டும். எனக்கு வழிவிடுங்கள், என்றார் விவேகானந்தர்.போடா! பெரிய பெரிய ஆட்களுக்கே அந்த அனுமதி கிடைக்காது. நீ கப்பலில் ஏறுவதாவது. உழக்கு மாதிரி இருக்கிறே!ஆசையைப் பாரேன், என விரட்டி விட்டான்.முடியாது என்ற வார்த்தையே விவேகானந்தரின் வாழ்க்கை சரிதத்தில் ஒருமுறை கூட இடம் பெற்றதில்லை. சின்ன நரேன் யோசித்தார்.துரையின் அலுவலகத்திற்கு செல்ல குறுக்கு வழி இருக்கிறதா என சுற்றுமுற்றும் பார்த்தார். துரை அந்தக் கட்டடத்தின் மாடியில் இருப்பதை புரிந்து கொண்டார். கட்டடத்தின் பின்பகுதிக்குச் சென்றார். அங்கே மாடி படிக்கட்டு இருந்தது. அங்கே காவலர்கள் இல்லை.

இதில் ஏறினால், துரை இருக்கும் அறையை அடைந்து விடலாம் என அனுமானித்தான். பூனை போல பதுங்கி ஏறிவிட்டான்.அந்த படிக்கட்டு ஒரு அறையின் வாசலை அடைந்தது. உள்ளே எட்டிப்பார்த்தால் துரை இருந்தார். அங்கே ஒரு சிறிய வரிசை நின்றது. எல்லாரும் கப்பலைப் பார்க்க அனுமதி வாங்க வந்தவர்கள். நம் குட்டியும் வரிசையில் நின்று கொண்டார். துரை தலை நிமிராமலே எல்லாருக்கும் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார். விவேகானந்தரும் தனது விண்ணப்பத்தை நீட்ட ஏறிட்டு பார்த்தார் துரை. சிரித்து கொண்டார். கையெழுத்து போட்டு விட்டார். நன்றி சொல்லிவிட்டு வெளியேறினார் விவேகானந்தர்.இது மட்டுமா! அவரிடம் அச்சம் என்பதே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு முக்கிய சம்பவத்தையும் சொல்லலாம். நமது குழந்தைகள் மாடிப்படியில் இருந்து இறங்கினாலே பார்த்து இறங்குடா, வழுக்கிடாமே என்போம். விவேகானந்தர் வீடும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் விவேகானந்தரைதிட்டிக்கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் தான் இருப்பார்கள். ஆனால், தனிப்பிறவியான விவேகானந்தர் இதையெல்லாம் காது கொடுத்து கேட்கவே மாட்டார்.

மரம் விட்டு மரம் தாவுவது அவரது அன்றாடப் பழக்கங்களில் ஒன்று.இதை நரேந்திரனின் தாத்தா கண்டிப்பார்.டேய் நரேன்! மரத்தில் இருந்து குதிக்காதே, என்பார். நரேனோ தாத்தா முன்னிலையிலேயே மரத்தில் இருந்து குதிப்பார். தாத்தாவுக்கு கடும் ஆத்திரம். அவரைத் தடுத்து நிறுத்த, நரேன்! அந்த மரத்தின் பக்கம் இனிமேல் போகாதே. அதன்மேல், ஒரு பிரம்மராட்சஸ் (பேய்) இருக்கிறது. அது உன் கழுத்தை நெரித்து விடும், என்றார். விவேகானந்தரும் தாத்தாவிடம், அப்படியா என்றார். அதன்பின் மற்ற பையன்கள் அந்த மரத்தின் பக்கம் போவதையே தவிர்த்து விட்டனர்.விவேகானந்தர் அடுத்த நிமிடமே மரத்தில் ஏறப்போனார். நண்பர்கள் தடுததனர். ஏறாதே நரேன். தாத்தா சொல்வது நிஜமாகத்தான் இருக்கும், என்று.நரேன் அவர்களிடம், அட மடையர்களா! நாம் இத்தனை நாளும் இந்த மரத்தில் ஏறியிருக்கிறோம். ஏதும் நடக்கவில்லை. இன்று புதிதாக என்ன நடந்து விடும்? ஒருவேளை தாத்தா சொன்ன ராட்சஸ் இதில் இருக்குமானால் அது நம்மை இதற்குள் பிடித்திருக்க வேண்டுமல்லவா? கொஞ்சமாவது யோசியுங்கள், எனச் சொல்லிவிட்டு மரத்தில் விறுவிறுவென ஏறினார். உச்சியில் இருந்து டைவ் அடித்தார். தாத்தா! இப்போ நான் என்ன செய்தேன் தெரியுமா? நீங்கள் சொன்ன ராட்சஸூக்கு டைவ் அடிக்க கற்றுக் கொடுக்கிறேன், என்று சொல்லி, சிரித்துக் கொண்டே ஓடிவிட்டார்

மேலும் வாழ்க்கை வரலாறு

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)