Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 11ஜனவரி 03,2013

இப்படியாக, ராமகிருஷ்ண சங்கம் சிறிய அளவில் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த மர்ம வீட்டில் தாரக், மூத்தகோபால் என்ற சீடர்கள் மட்டுமே தங்கினர். சில சீடர்கள் சாரதா அன்னையாருடன் பிருந்தாவனத்தில் இருந்தனர். சிலர் வெளியூர் சென்றிருந்தனர். விவேகானந்தர் வழக்கு விஷயமாக கல்கத்தாவில் தங்க வேண்டியதாயிற்று. இருப்பினும், மர்ம வீட்டில் இருந்த சங்கத்துக்கு அடிக்கடி வந்து, சீடர்களிடம் துறவு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி பேசினார். ஒரு கட்டத்தில், அவர்கள் பூரண துறவறம் ஏற்பது பற்றி ஆலோசித்து முடிவெடுத்தனர். இதற்காக ஒரு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்ட்ப்பூர் தோட்டத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. சீடர்கள் அனைவரும் இணைந்து யாகத்தை நடத்தினர். பாபுராம், சரத், தாரக், நிரஞ்சன், காளி, சாரதா, கங்காதரர் ஆகிய சீடர்கள் யாக குண்டஙக்ளை சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவர் முகத்திலும் அமைதி நிலவியது.

ஆம்...மனிதர்கள் அமைதியைத் தேடித்தானே அலைகிறார்கள். பணத்தாலோ, பொருளாலோ அமைதி அழிகிறதே தவிர, எந்த குடும்பத்திலாவது, எந்த நாட்டிலாவது அது அமைதியை ஏற்படுத்தியிருக்கிறதா? போதும்...போதுமென வளர்ச்சியடைந்த நாடுகள் கூட, பணத்தால் நிம்மதி பெறவில்லையே! குழந்தை குட்டிகள், பேரன், பேத்திகளால் அமைதி அடைந்தவர்கள் உண்டா? விவேகானந்தர் இதையெல்லாம் ராமகிருஷ்ணரிடம் இருந்து அறிந்தவர். அவரது சொந்த வாழ்வும் இப்போது அமைதியைத் தராமல் சொத்து, சுகத்திற்காக வழக்காடுவதில் தானே கழிந்து கொண்டிருக்கிறது? எனவே தான் சீடர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஆத்ம அமைதிக்காக இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த யாகத்திற்கு பிறகு, அவர்கள் முழுநேர சந்நியாசிகளாகி விட வேண்டும் என்ற நோக்கம் அவர்கள் மனதில் யாககுண்டத்தின் அக்னியைப் போல கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அன்று மாலையில், விவேகானந்தர் சீடர்களிடையே பேசினார்.

ராம கிருஷ்ணரின் பேச்சை சீடர்கள் எப்படி கருத்துடன் கேட்பார்களோ, அதே சிரத்தையுடன் இப்போது விவேகானந்தரின் பேச்சையும் அவர்கள் கேட்டனர். இப்போது விவேகானந்தருக்கு வயது 24 தான். மற்ற சீடர்களுக்கும் ஏறத்தாழ இதே வயது. விவேகானந்தருக்கு பைபிளில் நல்ல பரிச்சயம் உண்டு. இயேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோள் காட்டி அவர் சீடர்களிடம் பேசினார். நண்பர்களே! மக்களின் துன்பம் துடைக்க வந்த மாமேதை இயேசுநாதர். அவர் சிலுவை யில் அறையப்பட்ட போது, அந்த துன்பத்தையும் இன்பமாக ஏற்றுக் கொண்டார். பண்பின் சிகரம் அவர். ஒரு மலையின் மீது ஏறிநின்று அன்பின் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விளக்கினார். தேவ சாம்ராஜ்யம் என்பது மக்களின் இதயங்களில் இருக்கிறது என்று அடித்துச் சொன்னார். இதை தவறாகப் புரிந்து கொண்டான் அந்நாட்டு மன்னன். அவர் சிலுவையில் அறையப்பட்டார். அப்படி தன்னை சிலுவையில் அறைபவர்களையும், இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென அறியமாட்டார்கள். இவர்களை மன்னியும் என பிதாவிடம் வேண்டினார். அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார். சீடர்களே! நீங்களும் பரமஹம்சரின் போதனைகளை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால், அவரும் இயேசுவைப் போல நம்மிடையே மீண்டும் வருவார், என்றார்.

அவர்கள் முழு துறவறம் ஏற்ற நாளும் கிறிஸ்துமசுக்கு முந்தையநாள் என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் சன்னியாசிகள் தங்கியிருந்த மடம் ஓரளவு வளர்ச்சி பெற்றது. பலரும் சன்னியாசிகளாக சேர்ந்தனர். எல்லாரும் தங்கள் பெயரை சன்னியாசிகளுக்கு தகுந்தாற்போல் மாற்றினர். ராக்கால் என்ற சீடர் பிரம்மானந்தர் ஆனார். சாரதாவுக்கு திரிகுணாதீதானந்தர், லாட்டுவுக்கு அத்புதானந்தர், யோகினுக்கு யோகானந்தர், பாபுராமுக்கு பிரேமானந்தர், ஹரிக்கு துரியானந்தர், நிரஞ்ஜனருக்கு நிரஞ்ஜனானந்தர், சசிக்கு ராமகிருஷ்ணானந்தர்...இப்படி எல்லாருக்கும் சந்நியாசப் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் கல்கத்தா கோர்ட்டில் நடந்த வழக்கு விவேகானந்தருக்கு சாதகமாக முடிந்தது. தர்மதேவதையின் பக்கம் தர்மம் நிற்பது சகஜம் தானே! நீதி வென்றதும், வீட்டைப்பற்றிய கவலை அறவே தீர்ந்தது. வீட்டில் தாய் புவனேஸ்வரி அம்மையாரை தங்க வைத்துவிட்டு, முழுக்க முழுக்க இறைத்தொண்டிலேயே ஆழ்ந்தார் விவேகானந்தர். எல்லா சீடர்களையும் விவேகானந்தருக்கு பிடிக்கும் என்றாலும், சசி எனப்பட்ட ராமகிருஷ்ணானந்தரை மிகமிக பிடிக்கும். காரணம், அந்த ஆஸ்ரமத்தில் சமையல் அவரது பொறுப்பு. அவர் சமையலை முடித்துவிட்டு, சீடர்களுக்கு எடுத்து வைப்பதற்காக காத்திருப்பார். சீடர்கள் தியானத்தில் மூழ்கிவிட்டால் எழவே மாட்டார்கள். அங்கே சாப்பாடு ஆறுது. வாங்க! வந்து சாப்பிட்டு முடிச்சுட்டு திரும்பவும் தியானியுங்க, என எல்லாரையும் அழைப்பார்.

தியானத்தில் மூழ்கிப் போனவர்களுக்கு இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. சமாதிநிலையில் மூழ்கிக்கிடப்பார்கள். அவர்களை கையைப் பிடித்து இழுத்து வந்து சாப்பிட வைத்து விடுவார் சசி சுவாமி. ராமகிருஷ்ணானந்தர் நமக்கு தாய் போன்றவர், என்று சீடர்களிடம் சொல்வார் விவேகானந்தர். இந்த சீடர்களை சாதுக்கள் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். சாதுக்களில் பலருக்கு தீர்த்த யாத்திரை சென்று கோயில்களைத் தரிசிக்கும் எண்ணம் ஏற்பட்டது. திரிகுணாதீதானந்தர் பிருந்தாவனம் சென்று விட்டார். அகண்டானந்தர் கைலாய யாத்திரை கிளம்பி விட்டார். பிரம்மானந்தருக்கு நர்மதை நதியோரமாய் அமர்ந்து நிஷ்டையில் அமரும் ஆசை இருந்தது. அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு வசதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், ராமகிருஷ்ணானந்தருக்கு மட்டும் அப்படி ஒரு எண்ணமே வரவில்லை. அவர் ஆசிரமத்திலேயே தங்கியிருக்க விரும்பினார். ராமகிருஷ்ணரின் அஸ்தி அந்த ஆசிரமத்தில் இருந்தது. அவர் பயன்படுத்திய துணிகள், பாத்திரம் ஆகியவையும் இருந்தன. அஸ்திக்கு பூஜை செய்து, பாத்திரம், துணிகளை பாதுகாத்துக் கொண்டு அங்கேயே இருந்தார். விவேகானந்தரும் அவ்வப்போது சில ஊர்களுக்கு சென்றாலும், ஆசிரமத்துக்கு உடனடியாக திரும்பி விடுவார். ஆன்மிகத்தில் வளர்ந்து வரும் சீடர்களைக் காக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அவர்கள் மனநிலை பக்குவமடைந்த பிறகு சுவாமிஜி, யாத்திரை புறப்பட்டார். அவர் சென்ற முதல் வெளியூர் எது தெரியுமா?

மேலும் வாழ்க்கை வரலாறு

வாசகர் கருத்து (5)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)